

வரி நிலுவைத் தொகை விவகாரம் தீர்க்கப்படாத வரை கெய்ர்ன் வேதாந்தா இணைப்பை அனும திக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வேதாந்தா குழும நிறுவனத் தலைவர் அனில் அகர்வாலுக்கு மிகப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை 2011-ம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் வாங்கி யது. கடந்த ஆண்டு வேதாந்தா நிறுவ னத்துடன் கெய்ர்ன் நிறுவனத்தை இணைப்பதற்காக பங்குச் சந்தையில் வேதாந்தா நிறுவனம் உரிய விண்ணப்பத்தை அளித்தது.
கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத் துக்கு கெய்ர்ன் இந்தியா நிறுவனத் தின் பங்குகளை பரிவர்த்தனை செய்ததில் கிடைத்த ஆதாயத் துக்கு ரூ.10,247 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை 2014-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வரித் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.29 ஆயிரம் கோடியாக உயர்ந்துள் ளது. வட்டி மட்டும் ரூ.18 ஆயிரம் கோடியாகும். பரிவர்த்தனை 2006-07-ம் ஆண்டில் நடந்தது.
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத் துக்கு தற்போது 9.8 சதவீத பங்குகள் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தில் உள்ளது. இந்த பங்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
இதனால் இந்தப் பங்குகளை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தால் விற்க முடியவில்லை. இதன் விளைவாக கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் லண்டன் சந்தையில் கடுமையாக சரிந்தன.
முன் தேதியிட்டு வரி விதிக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 18-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரித் தொகையை செலுத்த முன்வந்தால், வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தது.