

புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டில் தங்கத்தின் தேவை 4,021.3 டன்னாக அதாவது 10 சதவீதம் அதிகரித்துள்ளது என தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் தங்கத்துக்கான தேவையின் போக்குகள் குறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. கரோனா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2020-ம் ஆண்டில் தங்கத்தின்
ஒட்டுமொத்த தேவை 3,658.8 டன்னாக இருந்தது.
இந்நிலையில் 2021-ம் ஆண்டில் தங்கத்தின் சர்வதேச தேவை 4,021.3 டன்னாக உயர்த்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த டிசம்பர் நிலவரப்படி இது கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்தியாவுக்கான பிராந்திய தலைமை செயல் அதிகாரி பி.ஆர்.சோமசுந்தரம் கூறும்போது, “2021-ம் ஆண்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்புக்கு 4-ம் காலாண்டில் மத்திய வங்கியின் தங்க கொள்முதல், தங்க நகைகள் நுகர்வில் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை காரணமாக அமைந்தன” என்றார்.
2021-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்டோர் – டிசம்பர்) தங்கத்தின் தேவை 1,146.8 டன்களை எட்டியது. இது கடந்த 2019-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு மிக அதிக காலாண்டு அளவாகும்.
2021-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் தங்க பிஸ்கட் மற்றும் தங்க நாணயத்தின் தேவை 31 சதவீத வளர்ச்சியை கண்டது. இது 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். கரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிச்சயமற்ற பொருளாதார நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுக்காக தங்கத்தை வாங்கியது இதற்கு காரணமாகும்.