Published : 28 Jan 2022 09:26 AM
Last Updated : 28 Jan 2022 09:26 AM
புதுடெல்லி: வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு ப்ரீபெய்டு ரீசார்ஜ் ப்ளானாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.
தற்போது பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் அதிகபட்சமாக 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 13 முறை தங்களின் செல்ஃபோன் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், வவுச்சர், சிறப்பு டாரிஃப் வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் வேலிடிட்டியாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஓராண்டுக்கு மேற்கொள்ளும் ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12 ஆகக் குறையும்.
ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழலால் தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான புகார்கள் வந்த நிலையிலேயே ட்ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் பிரிட்டனின் வோடாஃபோன், அமெரிக்காவின் வெரிஸோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் என்றெல்லாம் கணக்கில் கொள்ளாமல் வாடிக்கையாளர் பார்வையிலிருந்து பல்வேறு ப்ளான்களையும் வழங்குகிறது. ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்யும் வகையிலான ப்ரீபெய்டு ப்ளான்களே உலகளவில் பிரபலமாக இருப்பதால் அதையே இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் பின்பற்றலாமே என்ற யோசனையை ட்ராய் முன்வைத்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறுப்பு: ஆனால் இந்த யோசனைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. வோடாஃபோன் ஐடியா நிறுவனமானது, தற்போது நடைமுறையில் உள்ள 28, 54 மற்றும் 84 நாட்கள் ப்ளான் வேலிடிட்டியை மாற்றினால் பில் செய்யும் தேதியில் (பில்லிங் சைக்கிள்) குளறுபடி ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் இதைக் கொண்டு சேர்க்க பூதாகரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல் சில்லரை விற்பனை பிரதிநிதிகளுக்கும் பயிற்சிகளை அளிக்க வேண்டியிருக்கும். ஆகையால் தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவில் ஒரே நாளில், ஒரே தொகைக்கு ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதல்ல என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனமானது, ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருவாய் கொண்டோர். அவர்களுக்கு 28 நாட்கள் ரீசார்ஜ் என்பது பட்ஜெட்டாக இருக்கிறது. வாராந்திர அடிப்படையில் தங்களின் மொபைல் செலவைக் கண்காணித்துக் கொள்ள உதவுகிறது என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT