Published : 22 Jan 2022 12:16 PM
Last Updated : 22 Jan 2022 12:16 PM

கரோனா பெருந்தொற்று செலவை ஈடுகட்ட குஜராத் மாநிலத்தில் 28 டன் தங்கம் விற்பனை

அகமதாபாத்: கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க குஜராத் மாநில மக்கள் தங்கள் வசமிருந்த 28 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளனர்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 டிசம்பர் வரையான காலத்தில் மொத்தம் 142 டன் தங்கம் மறு சுழற்சிக்காக வந்ததாக உலக தங்கக் கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது. இதில் குஜராத் மாநிலத்தின் பங்கு 20 சதவீத அளவுக்கு உள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான தொழில்கள் முடங்கின. இதனால் தங்களது பொருளாதார தேவைகளை ஈடுகட்ட தங்கத்தை மக்கள் விற்பனை செய்தனர். அந்த வகையில் மறு சுழற்சிக்காக வந்த தக்கத்தின் அளவு ஓராண்டில் 142 டன்ன என்று இந்திய தங்கம் மற்றும் நகை வர்த்தகர் சங்கத்தின் இயக்குநர் ஹரேஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காலத்தில் குடும்பத் தலைவரை சில குடும்பத்தினர் இழந்தனர். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளன. உற்பத்தித் துறைகளில் சிலவும் வளர்ச்சியை எட்டின. சிறு வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டு சிலர் தங்களது வர்த்தகத்தை முற்றிலுமாக மூடி மாற்று தொழிலில் இறங்கிவிட்டனர். தங்களது கடன் சுமையைத் தவிர்க்க அவர்களுக்கு இருந்த ஒரே மாற்று வழி சேமிப்பாக முதலீடு செய்திருந்த தங்கத்தை விற்பதுதான். இதைத்தான் பல குடும்பத்தினரும், சிறு வர்த்தகர்களும் மேற்கொண்டனர் என்று ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.

மறு சுழற்சிக்கு வந்துள்ள தங்கத்தின் வரத்து 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல தங்கத்தின் மீது கடன் பெறும் அளவும் அதிகரித்துள்ளதாக டபிள்யூஜிசி நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார். தங்க நகைகள் மீதான ஈர்ப்பு அதிகம் உள்ளதால் பலரும் தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் நிலைமையை சமாளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x