முரட்டுப் பிடிவாதக்காரர்களைச் சமாளிப்பது எப்படி?

முரட்டுப் பிடிவாதக்காரர்களைச் சமாளிப்பது எப்படி?
Updated on
3 min read

நண்பர் கேசவன் வித்தியாசமான மனிதர். நீங்கள் ஒருமுறை அவரைச் சந்தித்தால், அதற்கு அப்புறம் அவர் வரும் திசையை விட்டே ஓடி விடுவீர்கள். அறிவாளி. ஆனால், தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்னும் கர்வம். தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, ஊழல், காஷ்மீர் தகராறு ஆகிய எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் வழி அவருக்குத் தெரியும்.

அதுவும், தனக்கு மட்டும்தான் அவை தெரியும் என்பதில் அவருக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகம் கிடையாது. ஒபாமா தொடங்கி, நரேந்திர மோடி தொடர்ந்து, ரஜினிவரை, வெளிநாட்டுக்கொள்கை, நிர்வாகம், சினிமா என்று அத்தனை சப்ஜெக்ட்களிலும் ஆலோசனைகளை அள்ளி வீசுவார்.

என் நமக்கு ஏன் இரண்டு காதுகள், ஒரே ஒரு வாய்? அதிகமாகப் பிறர் பேசுவதைக் கேட்கவேண்டும், குறைவாகப் பேச வேண்டும் என்பதால்தானே? கேசவனுக்குத் தெரியாத உண்மை இது. அவரோடு பேசத் தொடங்கினீர்களோ, இரு பக்கக் கருத்துப் பரிமாற்றமே கிடையாது. மோனோ ஆக்டிங் மாதிரி, தானே பேசிக்கொண்டே இருப்பார். கேசவன் ரோடில் வந்தால், அவரைச் சந்திப்பதைத் தவிர்த்து ஓடிவிடலாம். ஆனால், கேசவன் போன்றவர்களை நம் வாழ்க்கையில், பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் சந்திக்கிறோம். பேச்சு வார்த்தைகளில் கேசவன்கள் வரும்போது, வாழ்க்கையே வெறுத்துவிடும்.

நம்பிக்கையை இழக்காதீர்கள். இத்தகைய முரட்டுப் பிடிவாதக்காரர்களை, தலைக்கனம் பிடித்தவர் களைச் சமாளிக்க, அவர்களோடு டீல்களை முடிக்க, வழிகள் இருப்பதாக அனுபவசாலிகள் சொல்கிறார்கள்.

1. சந்திப்பின் அடிப்படை விதிகளைத் தெளிவாக்குங்கள்

ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி விதிமுறைகள் உண்டு. கிரிக்கெட் ஆடுவதுபோல், கால்பந்து ஆடக்கூடாது. எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று இவை தெளிவாகச் சொல்லும். இதேபோல், அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை, அனுமதிக்கப்படாதவை எவை என்று பேச்சு வார்த்தைகள் தொடங்கும் முன்பாகவே, இவர்களோடு முடிவு செய்யுங்கள்.

உதாரணமாக, தனிநபர் தாக்குதல் கூடாது, மீட்டிங்கில் இல்லாதவர் மீது குற்றப் பத்திரிகை படிக்கக்கூடாது, கோபத்தில் வெளிநடப்பு கூடாது, யாரையும் ஒருமையில் அழைக்கக்கூடாது, வயதில், பதவிகளில் குறைவானவர்களையும் நீங்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை அமைத்துக்கொள்ளுங்கள். ஒரு சில சமயங்களில், இந்த விதிகளை யாராவது மீறலாம். ஆனால், பேச்சு வார்த்தைகள் பண்பாட்டோடு நடக்க இந்த வரம்புகள் உதவும்.

2. பிடிவாதத்தின் காரணங்களைக் கண்டுபிடியுங்கள்

சிலர் அடிப்படையிலேயே, முரட்டுத்தனம் உள்ளவர்கள். சிலர் டீல்களின்போது மட்டும் அப்படி நடந்துகொள்வார்கள். என் நண்பர் ராகவன் அப்படித்தான். பழக இனிமையானவர். ஒரு பெரிய கம்பெனியில் பர்ச்சேஸ் ஆபீசராக இருக்கிறார். தனக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் கறாராகப் பேசுவார். அடிமாட்டு விலை கேட்பார். அவர்கள் தரும் நியாயங்களைக் கேட்கவே மாட்டார்.

குறைந்த விலையில் பொருட்களை வாங்குபவர் என்று உயர் அதிகாரிகளிடம் பெயர் வாங்கவேண்டும் அவர் பிடிவாதத்தின் அடிப்படைக் காரணம் இதுதான். ”முரட்டுத்தனமானவர்கள்” என்று பெயர் வாங்கியவர்களோடு டீல் நடத்தவேண்டுமானால், அவர்களைப் பற்றி விசாரியுங்கள். எப்படி அவர்களை மசியவைப்பது என்பது தெரியவரும்.

3. அவர் பேசுவதைக் கேளுங்கள்

எதிராளி பிடிவாதக்காரர், பேசிக் கொண்டேயிருப்பார் என்னும் முன் அனுமானங்களோடு அவரைச் சந்தித்தால், நம் மனக்கதவுகள் மூடிவிடும். அவர் நல்ல கருத்துகளைச் சொன்னாலும், அவை நம் சிந்தனையில் பதியாது. எனவே, உங்கள் விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவர் பேச்சைக் கூர்ந்து கவனியுங்கள். அவர் சொல்வது புரியாவிட்டால், கேள்விகள் கேட்டு அவரை விளக்க வையுங்கள். நல்ல கருத்துகள் சொன்னால், அவரைப் பாராட்டுங்கள். மன இறுக்கம் தளர்ந்து, நட்பு மனப்போக்குக்கு அவர் வரலாம்.

4. உங்கள் பேச்சைக் கேட்க வையுங்கள்

நிச்சயமாக அவர்தான் முதலில் பேசுவார். அவர் சொல்வதில் எந்த அம்சத்தையாவது புகழுங்கள். அவர் சில வினாடிகள் நிறுத்துவார். அப்போது, விவாதத்தில் அவர் அறியாமலே, புகுந்துவிடுங்கள்.

5. முரட்டுத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்

ஜல்லிக்கட்டுக் காளையின் முன்னால் சிவப்புத் துணியைக் காட்டலாமா? அவர்கள் இன்னும் முரட்டுத்தனமாக எகிறுவார்கள். முள்ளில் துணி விழுந்தால் என்ன செய்வோம்? துணி கிழியக்கூடாது என்பது நம் குறிக்கோள். மெள்ள மெள்ள எடுப்போம்.

அதுபோல், பொறுமையோடு அவர்களை வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அவர்கள் நடைமுறை உங்கள் பொறுமையைச் சோதித்தால், சில நிமிடங்கள் வெளியே போய்விட்டுத் திரும்ப வாருங்கள்.

6. சுலபமாக விட்டுக் கொடுக்காதீர்கள்

அவர்களுடைய அநியாயக் கோரிக்கைகள் எவற்றுக்கும் இணங் காதீர்கள். முரட்டுத்தனத்தால் காரியத் தைச் சாதித்துவிடலாம் என்னும் எண்ணத்தை அவர்கள் மனதில் வளர விடாதீர்கள். அப்புறம், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், கோரிக்கை களுக்கும் எல்லையே இல்லாமல் போய்விடும். அநியாயமான கோரிக் கைகளை அவர்கள் முன்வைத்தால், தெளிவாக, கண்டிப்பாக மறுத்து விடுங்கள்.

7. ஒண்டிக்கு ஒண்டி வேண்டாம்

எத்தனை முரடர்களாக இருந்தாலும், நான்கு பேர் கருத்துகள் பற்றிக் கவலைப்படுவார்கள். தனியாகப் போகாமல் அணியாகச் செல்லுங்கள். அவரும் தன் அணியை அழைத்து வரட்டும். அவருடைய முரட்டுத்தனத்துக்கு, கோபத்துக்கு, ஆட்கள் எண்ணிக்கை கடிவாளம் போடும்.

8. அவர் ரெடி, நீங்கள் ரெடியா?

அநியாயமான கோரிக்கைகளை அவர் முன்வைக்கலாம். அவற்றுக்கு என்ன பதில் கொடுக்கலாம் என்று உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

9. பல தீர்வுகளைச் சொல்லுங்கள்

சாதாரணமாக, பிரச்சினைக்கு ஒரு தீர்வோடுதான் போவது வழக்கம். அது இணக்கமானதாக இருந்தாலும், பிடிவாதக்காரர்களின் ஈகோ இதை ஒப்புக்கொள்ளாது. அவர்களைப் பொறுத்தவரை, பேச்சு வார்த்தைகள் என்பது ஒரு யுத்தம். ஒருவர் ஜெயிக்கவேண்டுமானால், மற்றவர் தோற்கவேண்டும். உங்கள் குறிக்கோள், யார் ஜெயிக்கிறார்கள் என்பதல்ல, பிரச்சனைக்குச் சுமுகமான முடிவு கிடைக்கவேண்டும் என்பது. ஆகவே, பல தீர்வுகளை எடுத்துவையுங்கள். அவர் ஒன்றைத் தேர்ந்தெடுக்கட்டும். தான் முடிவெடுத்ததாக அவர் பெருமைப்படட்டும், பிரச்சனை முடிந்ததாக நீங்கள் கொண்டாடுங்கள்.

10. பேச்சு வார்த்தை முடிவுகள் எழுத்து வடிவம் எடுக்கட்டும்

இவர்களில் பலர் நேர்மை குறைவானவர்கள். தங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பது மட்டுமே இவர்கள் குறிக்கோள். தங்களால் செய்யமுடியாத காரியங்களிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். உடனேயே அவற்றை மறந்துவிடுவார்கள். பேச்சு வார்த்தைகள் முடிந்தபின், விவாதங்களின் சுருக்கம், முடிவுகள் ஆகியவற்றை அறிக்கையாக எழுதுங்கள். கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் அனுப்புங்கள்.

11. வெளிநடப்புச் செய்யத் தயாராக இருங்கள்

எத்தனைதான் பொறுமையோடு நீங்கள் பேசினாலும், விட்டுக் கொடுத்தாலும், சிலர் இணங்கியே வரமாட்டார்கள்; உங்கள் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள்; தாங்கள் முதலில் சொன்னதையே மறுபடி, மறுபடி சொல்வார்கள்.

இவர்களிடம் தொடர்ந்து பேசுவது டைம் வேஸ்ட். அவர்களின் இந்த அணுகுமுறை தொடர்ந்தால், பேச்சு வார்த்தைகளிலிருந்து விலகிக் கொள்வோம் என்று இரண்டு முறை பயமுறுத்துங்கள். அப்படியும் அவர்கள் கேட்காவிட்டால், மறு சிந்தனையே இல்லாமல் நடையைக் கட்டுங்கள்.

slvmoorthy@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in