

பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப் பாடுகளை அரசு தளர்த்தியதற்கு இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வரவேற்றுள்ளது.
இந்த முடிவின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். உற்பத்தித்துறை வளர்ச்சியை எட்டும் என்று சிஐஐ தெரிவித் துள்ளது. அந்நிய நேரடி முதலீடு வாயிலாக 48 கோடி டாலர் அளவுக்குத்தான் இந்தியாவுக்குள் வருகிறது. இந்த அளவானது இப்போது அனுமதிக்கப்பட்ட 26 சதவீத அளவாகும். இருந்தபோதிலும் பாதுகாப்புத்துறைக்கான கதவு தனியார் துறைக்கு இதுவரை திறக்கப்படவேயில்லை.
நேரடி அந்நிய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற அரசின் முடிவை சிஐஐ முற்றிலுமாக வரவேற்கிறது. எந்த ஒரு முதலீடும் உள்நாட்டுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கக்கூடாது. அந்த வகையில் ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று சிஐஐ வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் அடிப்படை ஆதாரமான உற்பத்தித் துறை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்று அரசு கருதுகிறது.
ராணுவ கொள்முதலில் கடந்த சில காலமாக நிகழ்ந்த முறைகேடுகள் மற்றும் இத்துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாதது ஆகியன கொள்முதலை வெகுவாகப் பாதித்துள்ளன. மத்திய அரசு இப்போது எடுத்துள்ள நிலைப் பாடு காரணமாக ராணுவ தளவாடங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இங்கு அமைக்க வழி ஏற்பட் டுள்ளது. இதன் மூலம் உயர் தொழில்நுட்பமும் பாதுகாப் புத்துறைக்குக் கிடைக்கும்.