Last Updated : 08 Jun, 2014 01:10 PM

 

Published : 08 Jun 2014 01:10 PM
Last Updated : 08 Jun 2014 01:10 PM

நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி ரூ. 30,213 கோடி: கடந்த ஆண்டை விட 60 சதவீதம் அதிகம்

நாட்டில் கடல் உணவு ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த நிதி ஆண்டில் (2013- 2014) 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து மொத்தம் ரூ. 30,213.26 கோடி மதிப்பிலான 9,83,756 டன் கடல் உணவு பொருள்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டுவதில் கடல் உணவு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது

கடல் உணவு ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மண்டல அலுவலகம் சார்பில் 2013- 2014-ம் ஆண்டில் ஏற்றுமதியான கடல் உணவு பொருள்கள் விபரம் வருமாறு:

60 சதவீதம் வளர்ச்சி

2013-2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 9,83,756 டன் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 30,213.26 கோடியாகும். அமெரிக்க டாலரில் இதன் மதிப்பு 5007.70 மில்லியன் டாலராகும்.

அதிக இறால் ஏற்றுமதி

ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள முக்கிய கடல் உணவு பொருள் பதப்படுத்தப்பட்ட இறால் ஆகும். 2013- 2014-ம் ஆண்டில் 3,01,435 டன் பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 19,368.20 கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அளவில் 31.85 சதவீதமும், மதிப்பில் 99.54 சதவீதமும் அதிக மாகும். பதப்படுத்தப்பட்ட இறாலை பொறுத்தவரை அதிகபட்சமாக அமெரிக்காவுக்கு 95,927 டன்னும், ஐரோப்பிய யூனியனுக்கு 73, 487 டன்னும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 52,533 டன்னும், ஜப்பானுக்கு 28,719 டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இறாலுக்கு அடுத்தப்படியாக பதப்படுத்தப்பட்ட மீன் ரூ. 4294.81 கோடி மதிப்பிலான 3,24,359 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அளவில் 5.68 சதவீதம் குறைவு. ஆனால், ரூபாய் மதிப்பில் 30.27 சதவீதம் அதிகமாகும். அமெரிக்க டாலர் மதிப்பில் 14.74 சதவீதம் அதிகமாகும்.

தென் கிழக்கு ஆசிய நாடுகள்

இந்திய கடல் உணவு பொருள்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் அமெரி்க்காவும், 3-வது இடத்தில் ஐரோப்பிய யூனியனும் உள்ளன. தொடர்ந்து ஜப்பான், சீனா, மத்திய கிழக்கு நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.

தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 2013-2014-ல் ரூ. 8046.59 கோடி மதிப்பிலான 3,80,061 டன் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு ரூ. 7747.67 கோடி மதிப்பிலான 1,10,880 டன்னும், ஐரோப்பிய யூனியனுக்கு ரூ. 6129.69 கோடி மதிப்பிலான 1,74,686 டன்னும் ஏற்றுமதி யாகியுள்ளன.

கடல் உணவு பொருள்களை பொறுத்தவரை நாட்டில் உள்ள 26 துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக ஏற்றுமதியாகியுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x