Published : 13 Jan 2022 05:57 PM
Last Updated : 13 Jan 2022 05:57 PM

பிரிட்டன்- இந்தியா இடையே ஓராண்டுக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை

புதுடெல்லி: பிரிட்டன்- இந்தியா இடையே சுமார் ஒரு வருட காலத்திற்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம், இதன் மூலம் மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் பெரும் ஏற்றுமதிக்கான வளம் உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிரிட்டன் நாட்டு சர்வதேச வர்த்தகத்துக்கான அமைச்சர் அன்னி –மேரி டிரவெலினுடன், டெல்லியில் இன்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையை தொடங்கினார்.

இருநாட்டு பிரதமர்கள் நரேந்திர மோடி, போரிஸ் ஜான்சன் ஆகியோர் 2021-ம் ஆண்டு முடிவு செய்த இலக்கை எட்டும் வகையிலான இந்த ஒப்பந்தம், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா-பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக்க உதவும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல் கூறியதாவது:

பிரிட்டன்- இந்தியா இடையே சுமார் ஒரு வருட காலத்திற்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

துடிப்பு மிக்க ஜனநாயக நாடுகளான இந்தியாவும், பிரிட்டனும், நமது வரலாறு மற்றும் செழுமைமிக்க கலாச்சாரத்தால் கட்டமைக்கப்பட்ட கூட்டாண்மை கொண்டவை. பிரிட்டனில் பெருமளவில் உள்ள இந்திய வம்சாவளியினர் இருதரப்பு உறவை விரிவுபடுத்தும் பாலமாக திகழ்கிறது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை, நமது தோல், ஜவுளி, ஆபரணங்கள், பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் 56 கடல்சார் அலகுகளுக்கு பெறப்பட்டுள்ள அங்கீகாரத்தின் மூலம், கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவு உயர வாய்ப்புள்ளது.

மருந்து துறையில் பெரும் ஏற்றுமதிக்கான வளம் உள்ளது. பல்வேறு துறைகளில் வர்த்தகம் அதிகரிப்பதால், நேர்முக, மறைமுக வேலைவாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x