

'காஃபி டே' நிறுவனத்தின் கடன் சுமைகளை வெகுவாக குறைத்து, அந்த நிறுவனத்தை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் மாளவிகாவின் உத்வேகக் கதை இது...
கடந்த சில நாட்களாக நெட்டிசன்கள் பலரும் தங்களின் பதிவுகளில் ஒரு பெண்மணியை கொண்டாடி வருவதைக் காண முடிகிறது. அந்தப் பெண்மணியின் பெயர் மாளவிகா கிருஷ்ணா. இவர் ஏதேனும் அரசு தேர்வுகளில் சாதனை படைத்துள்ளாரா என்றால், இல்லை. பிறகு ஏன் இவரை கொண்டாடப்படுகிறார் என்பதற்கு அவரின் சமீபத்திய கதையே விடையாக உள்ளது. மாளவிகா கிருஷ்ணா என்று சொல்வதை விட மாளவிகா சித்தார்த்தா என்று சொன்னால் பலருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.
ஆம், 2019 ஜூலையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட 'காஃபி டே' நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா மனைவிதான் மாளவிகா. கணவரின் மறைவுக்கு பின் 'காஃபி டே' சாம்ரஜ்ஜியத்தை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டெடுத்த கதைதான் நெட்டிசன்கள் வைரலாக பதிவிட்டுவருகின்றனர். 3,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள், நாடெங்கும் 1,600 காபி டே கடைகள் என இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனராக வலம்வந்தவர் வி.ஜி.சித்தார்த்தா. இந்தியாவிலேயே மிக அதிகமான காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரரான சித்தார்த்தா, கடன் தொல்லை காரணமாக 2019 ஜூலையில் ஆற்றில் குதித்து தனது கதையை முடித்துக்கொண்டார்.
இவரின் தற்கொலை இந்திய கார்ப்பரேட் உலகை அசைத்து பார்த்தது. ஏன், மத்திய அரசே இவரின் தற்கொலையை அடுத்து வருமான வரி துறையில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. இந்த மாற்றங்களுக்கு மத்தியில் காஃபி டே மாளவிகா கைகளில் வந்து சேர்ந்தது. இங்கே மாளவிகா பற்றி சிறிய அறிமுகம் தேவை. மாளவிகாவின் குடும்பமே பாரம்பரியமாக செல்வந்தர் குடும்பம். அவரின் தந்தை கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா. கணவர் சித்தார்த்தா குடும்பமும் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பமே.
இதனால், பிறந்தது முதலே வறுமை, கஷ்டம் என்னவென்று தெரியாமல் வளர்ந்த ஒரு பெண் மாளவிகா. அப்படிப்பட்டவர் கணவன் இறப்புக்கு பிறகு முற்றிலும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குச் சென்றார். நன்றாக நினைவிருக்கிறது. சித்தார்த்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளின்போது மாளவிகாவை அழைத்து வந்து கடைசியாக கணவரின் முகத்தை பார்க்க வைப்பார்கள். ஆனால், கணவரின் முகத்தை பார்க்க முடியாத அளவு மன உறுதியில்லாமையால் கதறி அழுதுகொண்டு செல்வார் மாளவிகா. அதுவரை அவரை பற்றி தெரியவாதவர்கள் மத்தியில் அன்று மன உறுதியில்லாத ஒரு பெண்ணாக மாளவிகாவின் பிம்பம் பதிந்தது.
தன் வாழ்வில் பேரிடியாய் அமைந்த அந்த நிகழ்வுக்கு பின் கணவன் விட்டுச்சென்ற நினைவுகளோடு மாளவிகா வீட்டோடு முடங்கியிருந்தார். சித்தார்த்தா விட்டுச்சென்ற நினைவுகள் மட்டுமல்ல, அதைவிட அவரின் கனவு நிறுவனத்தின் கடன் மிக அதிகம். சுமார் 7,000 கோடிகள். இவ்வளவு பெரிய தொகை கடன் என்றால், எந்த கொம்பனும் துவண்டுவிடுவான். மாளவிகா துவண்டுவிடவில்லை. கணவர் ஆசை ஆசையாக தொடங்கிய கனவு நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார்.
ஒருபுறம் அறியாத வயதில் இருக்கும் இரண்டு குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு வேறு இருக்கிறது. அதேநேரம் மறுபுறம் காஃபி டே சாம்ராஜ்ஜியத்தை சரிவில் இருந்து மீட்டெடுத்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. மாளவிகா நினைத்திருந்தால் இதே சூழ்நிலையை சந்தித்த இந்தியாவின் மற்ற தொழிலதிபர்களைப் போல பிரச்சினைகளில் இருந்து தப்பித்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
மனதை திடமாக்கிகொண்டு 'காஃபி டே' அலுவலக பணிகளை கவனிக்கத் தொடங்கினார். அடுத்தடுத்த மாதங்களில் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக பணிகளையும் ஒவ்வொரு படிநிலையாக கற்றுத் தேர்ந்துகொண்ட பின், 2020-ல் கணவன் விட்டுச் சென்ற CEO பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ரூ.7,000 கோடி கடன்களை அடைக்கும் வழிகளை ஆராய்ந்தவர், முதலில் 10 கோடி, 20 கோடி என்று சிறு, சிறு கடன்களை அடைக்கத் தொடங்கினார். பெரிய கடன்களை அடைக்க வங்கிகளிடம் அவகாசம் வாங்கினார்.
அடுத்தகட்டமாக பெரிய அளவு தராத இடங்களில் 'காஃபி டே' கிளைகளை களையெடுத்தவர், அதற்குப் பதிலாக காஃபி டேவை விரும்பும் மக்கள் அதிகம் உள்ள இடங்களாக தேர்வு செய்து முக்கிய வணிக வளாகங்களில் புதிய கிளைகள் திறந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார். கழுத்தை நெறிக்கும் கடன்களை அடைக்க குடும்ப சொத்துக்கள், நிறுவனத்தின் சொத்துக்கள் விற்க துணிந்தார்.
இந்தக் காலகட்டத்தில் தான் அடுத்த துயரம் கரோனா வடிவில் வந்தது. 'காஃபி டே' வணிகம் முற்றிலும் முடங்கிய சூழலில் மாற்றி யோசிக்கத் தொடங்கினார். லாக் டவுன் காலத்தை ஒரு உற்பத்தி நேரமாக மாற்றியவர், காஃபி தூள்கள், காஃபி உபகரணங்கள் என பல புதிய தயாரிப்புகளை தனது நிறுவனத்தின் சார்பில் அறிமுகப்படுத்தினார். மாளவிகாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. 2019 மார்ச் நிலவரப்படி, 'காஃபி டே' நிறுவனத்தின் கடன் ரூ.7,000 கோடி என்ற இருந்த நிலையில், அதுவே 2020 மார்ச்சில் ரூ.2,900 கோடி என்ற அளவில் பாதிக்கும் குறைவாக கடன் இருந்தது. 2021ன் மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 1,731 கோடி ரூபாயாக கஃபே காபி டே நிறுவனத்தின் கடன் குறைந்திருக்கிறது.
"எனது கணவர் சித்தார்த்தாவின் கனவு காஃபி டே. சித்தார்த்தாவின் கனவை பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துவருகிறேன். கடந்த 32 ஆண்டுகளாக சித்தார்த்தாவை அறிந்தவள் என்ற முறையில் 'காஃபி டே' தான் அவரின் உலகம் என்றும், அதன் ஊழியர்கள் தான் அவருடைய குடும்பம் என்பதையும் நன்றாகவே அறிவேன். நமக்கு சவால்கள் நிறைய இருந்தாலும், அதை சமாளிக்கும் சக்தி நமக்கு நிறையவே உள்ளது. 'காஃபி டே'வின் அனைத்து நிதிச் சுமைகளையும் அடைக்கும் தொலைநோக்கு திட்டத்தை நோக்கி பயணிக்க இருக்கிறோம். இந்தப் பயணத்தில் முன்னோக்கிச் செல்ல உங்கள் ஒவ்வொருவரின் உறுதுணையும் முக்கியம்." இது 'காஃபி டே' CEO பொறுப்பை ஏற்கும் முன் மாளவிகா தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதம்.
இன்று 'காஃபி டே' முன்னேற்றம் கண்டுவருவதற்கு தொழிலாளர்களோடு மாளவிகா பேணிக்காத்த நல்லுறவும் மிக முக்கியம். ஒவ்வொரு அசைவிலும் ஊழியர்களின் நலன்களை காக்க மாளவிகா முக்கியத்துவம் கொடுத்தார். அதற்கு சான்று தான் கரோனா சமயத்தில் காஃபி பொருட்கள் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்புகளை கொடுத்தது.
எதிர்மறை விமர்சனங்களை தாண்டி இன்று 'கஃபே காஃபி டே' மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது என்றால், அது மாளவிகாவின் துணிச்சல் நடவடிக்கைகளால் மட்டுமே. தற்போது முதலீட்டாளர்கள் பலரும் காஃபி டேவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். மாளவிகா என்ற புது நம்பிக்கையால் இவை அனைத்தும் சாத்தியப்பட்டு வருகிறது. இந்திய பெண்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதற்கு மாளவிகா சான்றாக அமைந்துள்ளார். ஊக்கமளிக்கும் இந்தக் கதையை பகிர்ந்து தான் மாளவிகாவை நெட்டிசன்கள் 'இரும்பு பெண்மணி' என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த வருடம் எகனாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டி இவ்வாறாக இருந்தது. "என் கணவரின் கனவு காஃபி டே. எங்களின் கடினமான காலங்கள் முடிந்துவிட்டது. ஊழியர்கள் மற்றும் வங்கிகள் காத்த பொறுமையால் நாங்கள் கடன் சுமையை வெகுவாக குறைத்துள்ளோம். நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று வருகிறோம். வரும் காலங்களில் என் கணவரின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபட்டு கொண்டே இருப்பேன். இன்னும் சில தடைகளை கடக்க வேண்டியுள்ளது. என்றாலும் இனி எங்களுக்கு வெற்றிப்பயணம் தான்" என்று தனது விடாமுயற்சியின் வலிகளை வார்த்தைகளாக உதிர்த்துள்ளார்.