Published : 12 Jan 2022 06:33 AM
Last Updated : 12 Jan 2022 06:33 AM

சரிவிலிருந்து மீளும் இந்திய பொருளாதாரம்: ஏற்றுமதி, வேலை வாய்ப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு

புதுடெல்லி: கரோனா தொற்றினால் ஏற்பட்டபாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை காக்கும் வகையில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2021-22) முதல் 9 மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 30 ஆயிரம் கோடி டாலரை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டியதைவிட 22 சதவீதம் அதிகமாகும். நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 40,000 கோடி டாலர் என ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எளிதில் எட்டிவிட முடியும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

2020-21-ம் நிதிஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 35,400 கோடி டாலராகும். முந்தைய நிதி ஆண்டை விட 5,700 கோடி டாலர் கூடுதலாக வர்த்தகமானது. இறக்குமதி 51,300 கோடி டாலராக இருந்தது.

நடப்பு ஆண்டில் அமெரிக்காவுக்கான வர்த்தகம் அதிகரித்துள்ளது. 5,870 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனாவுக்கான ஏற்றுமதி வர்த்தகம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா அதிகஅளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் வங்கதேசமும் இடம்பெற்றுள்ளது. வங்கதேசத்துக்கான இந்திய ஏற்றுமதி 67% அதிகரித்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதற்கு பல நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) போடப்பட்டதும் முக்கிய காரணமாகும். இந்தியா முதலில் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஐக்கிய அரபு அமீரகத்துடன்தான் போட்டது. ஆனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததைத் தொடர்ந்து அமீரகத்துடனான வர்த்தக அளவு கடந்த சில ஆண்டுகளாக குறைந்துவிட்டது. இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதால் ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பைஈடுகட்டுவதற்காக இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,700 கோடி அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்ட ஏற்றுமதி அளவைக் காட்டிலும் 37 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதி ஆண்டு முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் இத்தகைய ஏற்றுமதி வருமானத்தை இந்தியா இதுவரை எட்டியது இல்லை.

மின்னுற்பத்தி

2015-ம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில் மரபு சாரா எரிசக்தி இலக்கை எட்ட இந்தியா கையெழுத்திட்டது. இதன்படி 2030-ம் ஆண்டு எட்ட வேண்டிய இலக்கு 8 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே 2021-ம் ஆண்டிலேயே இந்தியா எட்டிவிட்டது குறிப்பிடத் தக்க சாதனையாகும். 40 சதவீதமின்னுற்பத்தியை மரபுசாரா மின்னுற்பத்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காற்றாலை, சூரிய மின்னுற்பத்தி மற்றும் அணு மின்னுற்பத்தி மூலம் இதை எட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் மொத்த மின்னுற் பத்தி 392 கிகாவாட் ஆகும். மரபுசாரா உற்பத்தி மூலமாக உற்பத்தி செய்ய வேண்டிய மின்னுற்பத்தி 157 கிகாவாட்டாகும். அரசு தனியார் பங்கேற்பு மூலம் இந்த இலக்கை எட்டப்பட்டுள்ளது. மரபு சாரா எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு (2014-19) 6,400 கோடி டாலராகும்.

வேலைவாய்ப்பு

ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் அதிக சம்பளத்துக்கு இந்திய மாணவர்கள் முன்னணி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை ஐஐடி-யில் மட்டும் 1,400 மாணவர் களுக்கு வளாகத் தேர்வில் வேலை கிடைத்துள்ளது. ஐஐடி-டெல்லி கல்வி மையத்தில் 1,250 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இதேபோல சென்னை ஐஐடி-யில் கடந்த ஆண்டை விட 73 சதவீதம் கூடுதலான எண்ணிக்கையில் மாணவர்களுக்கு வேலை கிடைத் துள்ளது. அத்துடன் ஊதியமும் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகமாகும்.

கரோனா காலகட்டத்தில் வேலையிழந்தவர்களில் 60 சதவீதம் பேருக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது. தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

இந்தியாவின் டிஜிட்டல் மூலமான வர்த்தக பரிவர்த்தனை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 30,000 கோடி டாலர் அளவுக்கு வர்த்தக பரிவர்த்தனை நடைபெற் றுள்ளது. இது சீனாவை விட 60 சதவீதம் அதிகமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x