

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) தலைவர் ஜெ.செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்கும் நூற்பாலைத் தொழிலின் இன்றைய நிலை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு, மூலப்பொருளான பஞ்சின் விலை அபரிமிதமாக அதிகரித்து வருவதே காரணம். உலகிலேயே தரமான பஞ்சு உற்பத்தி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக்குப் பின் நூற்பாலைகள் சீராக மீண்டும் திறக்கப்பட்டு, பஞ்சு தேவை அதிகரித்து வந்தது. இந்நிலையில், பஞ்சின் சராசரி விலை 2020-ம் ஆண்டு செப்டம்பரில் கண்டிக்கு (355 கிலோ) ரூ.37 ஆயிரமாக அதிகரித்தது. புதிய பருத்தி பருவ காலம் தொடங்கிய 2021-ம் ஆண்டு அக்டோபரில், அதன் விலை ரூ.60 ஆயிரமாக அதிகரித்தது. தற்போது, ரூ.80 ஆயிரமாக உள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பஞ்சுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இதுபோன்று பஞ்சின் விலை உயரும்போது, நூல் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஜவுளித்தொழில் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எம்சிஎக்ஸ், என்டிசிஇஎக்ஸ் ஆகிய பெரிய வர்த்தகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், பஞ்சின் விலை உயர்ந்து வருகிறது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றால், பருத்தியின் மீது விதிக்கப்படும் 11 சதவீத மொத்த இறக்குமதி வரியால், இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. அபரிமிதமான பஞ்சு விலை உயர்வால், கடந்த 2011-ல் பல நூற்பாலைகள் உள்ளிட்ட ஜவுளித்தொழில்கள் நிதி நெருக்கடியை சந்தித்தன. பல ஜவுளித்தொழில்கள் நிரந்தரமாக கைவிடப்பட்டன.
இந்த நிலை நீடித்தால், நடப்பு ஆண்டு முழு ஜவுளி சங்கிலியும் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்ற அச்சம் நூற்பாலை மத்தியில் நிலவுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத மொத்த இறக்குமதி வரியை முழுவதும் நீக்கி, உள்நாட்டு பஞ்சு விலை சந்தையை உறுதிப்படுத்த உதவ வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களும், பெரிய பஞ்சு வியாபாரிகளும், இடைத்தரகர்களும் அதிக அளவு பஞ்சை கொள்முதல் செய்து, இருப்பு வைத்துக்கொள்கின்றனர். அவர்களை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.