

கட்டுமானத்துறையை சேர்ந்த நிறுவனமான ஜேபி அசோசியேட்ஸ் 34,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்னணு சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருந்தது. இப்போது இந்த ஆலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் அருணா ஷர்மா தெரிவித்தார்.
கடந்த 2014 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சரவையினால் இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐபிஎம் மற்றும் இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த ஆலை அமைக்க முடிவு செய்தது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 34,399 கோடி ரூபாய் மதிப்பில் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக ஐடி துறை செயலாளர் தெரிவித்தார். அனுமதி கிடைத்த இன்னொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் செமி கண்டக்டர் இந்த திட்டம் குறித்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்த துறையில் முதலீடு செய்ய மேலும் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இது குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என்று அருணா ஷர்மா தெரிவித்தார்.
ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் இருக்கிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி தன்னுடைய சிமென்ட் தொழிலின் ஒரு பகுதியை ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 15,900 கோடி ரூபாய்க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.