Published : 04 Jun 2014 11:22 AM
Last Updated : 04 Jun 2014 11:22 AM

உழைக்கும் கரங்கள் பிழைக்குமா?

தாராசுரம் போயிருந்தேன். கும்ப கோணத்தில் யுனெஸ்கோ புண்ணியத்தில் சுத்தமாய், பசுமையாய் இருந்தது ஆலயம். 15 வருடங்கள் முன் நண்பருடன் தஞ்சை கோயில்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கத் திட்டமிட்டு கும்பகோணம் சென்றபோது, இரண்டாம் ராஜராஜன் பற்றி பேசியவாறு அக்ரஹாரத்தில் சாவி வாங்கி நாங்கள் இருவர் மட்டும் தனியாகக் கோயிலைச் சுற்றி வந்த ஞாபகம் வந்தது.

மதிய வேளை, கோயிலைச் சுற்றிய அசதி, கல் தூண்கள் கண்ட பிரமிப்புமாக கோயிலிலேயே சற்று கண் அசந்தோம். ஒரு கலைப் பொக்கிஷம் பார்ப்பாரற்றுக் கிடக்கிறதே என்று வேதனையுடன் திரும்பினோம். ஆவணப்படம் எழுத்தோடு நின்று போனது. நானும் வேறு வேலைகளில் மூழ்கிப் போனேன்.

சென்ற வாரம் தஞ்சையில் வேலை வந்தபோது, தாராசுரம் காட்டவே மனைவி, மகளை அழைத்து வந்தேன். ஒவ்வொரு தூணிலும் அத்தனை சங்கதிகள் இருந்தன. ஒரு இன்ச் அளவில் இரு முழு காளியை கல்லில் படைத்த கலைஞர்களை எண்ணி வியந்தோம். நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கோயிலை ஆழ்ந்து பார்க்க வேண்டுமானால் ஒரு நாள் போதாது.

கட்டிய பேரும் பெருமையும் சோழனுக்கு காலங்காலமாக நிலைக்கும். ஆனால் இதற்கு கல் செதுக்கி ரத்தம் சிந்திய மனிதர்களின் அறிவையும் உழைப்பையும் எத்தனை பேர் நினைவு கூறுவோம்? இந்த கோயில் என்று இல்லை; இத்தனை கோயில்களில் எத்தனை ஆயிரம் சிற்பிகள் இருந்திருப்பார்கள்? எங்கே மறைந்தார்கள் அவர்கள்? காலம் அவர்களை எப்படி தின்று விழுங்கியது?

இதைப் பேசிக்கொண்டே வெளியே வந்தபோது ஒரு பட்டுப்புடவை நெய்பவர் தன் வீட்டிற்கு வந்து புடவைகள் பார்க்க அழைத்தார். திருபுவனம் பட்டு என்று சந்தைப் படுத்தப்படும் சேலைகள் தாராசுரத்தில்தான் தயாராகின்றன என்றார். சில நிமிடங்களில் அவரின் புராதன வீட்டு வாசலில் தலை குனிந்து உள்ளே சென்றோம்.

பட்டு ஒரிஜினல் என்று நிரூபிக்க நூலை பொசுக்கிக் காண்பித்தார். நெய்த புடவைகளைக் காண்பித்தார். விலை பற்றி பேச்சு வந்த போது சொன்னார்: “என் தலைமுறைக்கு அப்புறம் யாரும் இதைச் செய்யப்போவதில்லை. என் காலம் வரைதான் இது!” புடவை கடைகள் செழிக்கும். நெசவாளிகள் பிழைப்பார்களா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

மறு நாள் முசிறி செல்லும் பாதையில் காவிரி ஆற்றில் மண் சாலைகள் அமைத்து மணல் அள்ளும் லாரிகள் நூற்றுக்கணக்கான எறும்புகள் போல தூரத்தில் தெரிந்தன. ஆமூரில் ஒரு பெரியவரிடம் இது பற்றிக் கேட்டேன். “அப்ப வெள்ளக்காரன் காலத்துல வாய்க்காலை முடக்குனாலோ திருப்பினாலோ கூட கேஸ் போடுவான். இப்ப மண்ணை ஆத்துக்கு நடுவுல ரோடு போட்டு தோண்டுறாங்க! காவிரி பள்ளமாயிடுச்சு.

வாய்க்காலெல்லாம் மேல நிக்குது. இனிமேல எங்கே தண்ணி வரும்? எங்க பசங்க யாரும் விவசாயம் பண்ணப் போறதில்ல..பேரப்பிள்ளைங்க படிப்புன்னு சிட்டிக்கு போற வரைக்கும்தான் இந்த கிராம வாழ்க்கையும்...!” என்று பெருமூச்சு விட்டார்.

சிற்பி, நெசவாளர், விவசாயி என மனித உழைப்பு பெரும்பங்கு உள்ள ஒவ்வொரு தொழிலையும் நசித்து வருகிறோம். தர்மபுரி பகுதியில் வேர்க்கடலை போட்ட தட்டை முறுக்கு ஒன்று சுடுவார்கள். அங்கு கிராமப் புறங்களில் மிக மலிவாகக் கிடைக்கும். சென்ற ஆண்டு அங்கு தேடியபொழுது, பன்னாட்டு நிறுவன சிப்ஸ் வகைகள் கிடைக்கும் அளவிற்கு இவை தட்டுப்படவில்லை. பத்து மடங்கு விலை கொடுத்து ஒரு இயந்திரம் தயாரித்த வற்றலை தின்போம். ஆனால் இந்த முறுக்கு சில ஆண்டுகளில் வழக்கொழிந்து போகும். இந்த சமையல் கலைஞர்களும் அழிந்து போவார்கள்.

வீட்டுக்கு வீடு கை முறுக்கு சுற்றிய காலம் போய் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? இதே கதிதான் அத்தனை கைவினை கலைஞர்களுக்கும் நிகழுமோ?

ஒரு முறை ஓசூரில் பயிற்சி நடத்திக் கொண்டிருந்தபோது அந்த பணியாளர்களிடையே சில கூத்தாடிகள் உள்ளதாகச் சொன்னார்கள். மதிய இடைவேளையின்போது நடித்துக் காட்டச் சொன்னேன். அதில் பீமனாக கர்ஜித்த கூத்தாடி ஏற்படுத்திய அதிர்வைப் போல ஒரு அதிர்வை என் வாழ்வில் கண்டதில்லை. “ முன்ன வருஷம் ஒரு முறையாவது கூத்து கட்டுவோம். இப்ப 3 வருஷம் ஆச்சு!” என்றனர்.

வளர்ந்த நாடுகளில் கைவினைப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். கைகளால் செய்யும் படைப்புகளை பாதுகாப்பார்கள். இங்கு கைபடாத தயாரிப்புகள் என்றால் தான் சந்தை. குறவர் சமுதாயம் தயாரிக்கும் ஊசி மணி பாசிகளில் உள்ள வர்ணஜாலங்கள் அலாதியானவை. சாலையோரம் கடை விரித்தால் அவற்றை பேரம் பேசி மலிவாக வாங்குகிறோம். பல கைவினை பொருட்கள் வெறும் பரிசுப் பொருட்களாக மட்டும் நகர வாழ்க்கையில் ஆகி வருகிறது.

கைவினைக் கலைஞர்களை நசுக்கி விட்டு இந்த தொழிலை காப்பாற்ற முடியாது. இந்தியா வல்லரசு ஆகுமோ டல்லரசு ஆகுமோ எனக்குத் தெரியாது. ஆனால் நம் ஆதாரத் தொழில்களை அழித்து விட்டு கலாச்சாரம் மட்டுமல்ல வியாபாரத்தையும் காப்பாற்ற முடியாது.

ஐம்பது வருடங்கள் கழித்து ஒரு வளர்ந்த நாட்டின் உதவியுடன் ஐ. ஆர். 8 நெல்லையும், உளுந்தக்களியையும், தஞ்சாவூர் பொம்மையையும், தெருக்கூத்தையும், தர்மாவரம் பட்டையும் மீட்டெடுக்க முனைவது எந்தளவு புத்திசாலித்தனம் என யோசிக்க வேண்டும்! அழிந்த பிறகு கலையைக் காக்க முனைவதை விட அழியும் முன் கலைஞனைக் காக்க முயல்வதே விவேகம்.

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x