

மத்திய அரசு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீது 57.80 கோடி டாலர் (சுமார் ரூ. 3,468 கோடி) அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் கிருஷ்ணா-கேதாவரி படுகையில் உள்ள கேஜி-டி6 பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் குறைவான இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. இதற்காக இந்த அபராதத்தை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த எண்ணெய் வயலில் இயற்கை எரிவாயு எடுக்காமலிருப்பதற்கான செலவு 2013-14-ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த செலவு 237 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அரசின் இந்த நோட்டீஸுக்கு ரிலையன்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 2013-14-ம் ஆண்டில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 57.80 கோடி டாலருக்கான நோட்டீஸ் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்த எண்ணெய் வயலில் 8 கோடி கனமீட்டர் எரிவாயு எடுக்கப்பட வேண்டும். இதில் பத்தில் ஒரு பகுதியே ரிலையன்ஸ் எடுக்கிறது. இதனால் முதலீடு பயன்படுத்தப்படாமலேயே வீணடிக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் வயலில் உற்பத்தி சார்ந்த ஒப்பந்தத்தின்படி ரிலையன்ஸ் மற்றும் அதன் கூட்டாளி நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் பிஎல்சி மற்றும் நிகோ ரிசோர்சஸ் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய மொத்த முதலீடு மற்றும் செயல்பாட்டு செலவையும் எரிவாயு விற்பனை மூலம் எடுத்துக் கொண்ட பிறகு லாபத்தை அரசுடன் பகிர்ந்துகொள்ளும்.
இதன்படி 1.15 கோடி டாலர் வருவாய் பகிர்வு கிடைக்காததால் அதை ஈடுகட்ட கேஜி பகுதியில் எடுக்கப்படும் எண்ணெய் மற்று எரிவாயுவுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள் வழங்க வேண்டிய தொகையை ஈடுகட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன்படி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியன ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்கின்றன. இவை செலுத்த வேண்டிய 11.50 கோடி டாலர் தொகையை அரசு கணக்கில் செலுத்தும்படி அறிவுறுத்தப்படும் என்று பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.