Last Updated : 03 Jan, 2022 06:54 AM

 

Published : 03 Jan 2022 06:54 AM
Last Updated : 03 Jan 2022 06:54 AM

வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது: கட்டண உயர்வை சமாளிக்க பொதுமக்களுக்கு அதிகாரிகள் யோசனை

சென்னை

ஏடிஎம் மையங்களில் பணப் பரிவர்த்தனைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைக் கட்டணமும் விரைவில்உயர்த்தப்பட உள்ளது. இந்நிலையில் கட்டண உயர்வை சமாளிக்க ஏடிஎம் கார்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து பொதுமக்களுக்கு வங்கி அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏடிஎம் மையங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இப்புதிய கட்டண உயர்வு ஜன.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, வங்கிகளின் இதர பரிவர்த்தனைக் கட்டணத்தையும் விரைவில் உயர்த்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தற்போது அதே வங்கியின் ஏடிஎம் மூலமாக மாதம் 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களின் மூலம் 3 முறையும் கட்டணமின்றி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதற்குமேல் செல்லும் பட்சத்தில், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜன.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, வங்கிப் பரிவர்த்தனைக் கட்டணத்தையும் ரிசர்வ் வங்கி உயர்த்த உள்ளது. இதன்படி, வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.17 ஆகவும், பிற சேவைகளுக்கான கட்டணங்கள் ரூ.5-லிருந்து ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளது.

முன்கூட்டியே திட்டமிடவேண்டும்

ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், நிச்சயமாக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் இக்கட்டண உயர்வை சமாளிக்க சிலவழிகளைப் பின்பற்றலாம். அதன்படி, ஒரு மாதத்துக்கு எவ்வளவு தொகை செலவாகும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்ப பணத்தை எடுக்க வேண்டும். இதன்மூலம், ஏடிஎம்களில் அடிக்கடிபணம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.

அதேபோல், தங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிய, அடிக்கடி ஏடிஎம் மையத்துக்குச் சென்று ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பண இருப்பை (பேலன்ஸ்) பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், ஒரு மாதத்துக்கு வழங்கப்பட்டுள்ள 8 இலவச பரிவர்த்தனைகளுக்குள், ஒரு மாதத்துக்குத் தேவையான நிதித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிட வேண்டும்.

கூகுள்பே, பேடிஎம் வசதிகள்

இன்றைக்கு சாலையோர வியாபாரிகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்களில் கடை வைத்திருப்பவர்கள் வரை அனைவரிடமும் கூகுள் பே, பேடிஎம் வசதிகள் உள்ளன. எனவே, இவற்றைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். சில அத்தியாவசியத் தேவைகளுக்கு ரொக்கப் பணம் தேவைப்படும்போது, அவற்றுக்கு மட்டும் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x