Published : 01 Jan 2022 04:09 PM
Last Updated : 01 Jan 2022 04:09 PM

தொடர்ந்து 6-வது மாதம்: ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் | கோப்புப்படம்

புதுடெல்லி: தொடர்ந்து 6-வது மாதமாக டிசம்பரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிடக் கடந்த டிசம்பரில் வருவாய் 13 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ''2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 780 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் 1 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயைவிட 13 சதவீதம் கூடுதலாக வரி வசூலாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.1.15 லட்சம் கோடி வசூலானது. நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர்-டிசம்பரில் சராசரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாகும். ஆனால் முதல் காலாண்டில் மாத சராசரி ரூ.1.10 லட்சம் கோடியாகவும், 2-வது காலாண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாகவும் இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த 5 மாதங்களில் அக்டோபர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரிதான் 2-வது அதிகபட்சமாகும். ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி எட்டியது. ஜூலையில் ரூ.1.16 லட்சம் கோடியும், ஆகஸ்டில் ரூ.1.12 லட்சம் கோடியும், செப்டம்பரில் ரூ.1.17 லட்சம் கோடியும், அக்டோபரில் ரூ.1.30 லட்சம் கோடியும், நவம்பரில் ரூ.1.31 லட்சம் கோடியும் வசூலாகியது.

டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 780 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.22 ஆயிரத்து 578 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.28 ஆயிரத்து 658 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.69 ஆயிரத்து 155 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 389 கோடி கிடைத்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x