

ஜனவரி 2016 வரை கார்ப்பரேட் வரி பாக்கி 4.18 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இந்த வரியை மத்திய அரசு வசூல் செய்ய வேண்டும் என்று நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவைக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் கூறினார்.
மொத்தம் 4,18,399 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி இன்னும் வசூலிக்கப்பட வேண்டும். இதில் முதல் 50 நிறுவனங்களிடம் மட்டும் 22,903 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த வரியை வசூலிக்க பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
சமூக பொறுப்புணர்வுக்காக கடந்த நிதி ஆண்டில் பட்டியலிடப் பட்ட 460 நிறுவனங்கள் இதுவரை 6,337 கோடி ரூபாய் செலவிட்டிருக்கின்றன என்று கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவைக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் கூறினார். இதில் 51 பொதுத்துறை நிறுவனங்கள் 2,386 கோடி ரூபாய் சமூக பொறுப்புணர்வுக்காக செலவிட்டிருக்கின்றன.
புதிய கம்பெனி சட்டத்தின் படி, நிறுவனங்கள் தங்களுடைய மூன்று வருட நிகர லாப சராசரியில் 2 சதவீதம் சமூக பொறுப்புணர்வுக்காக செலவிட வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதில் 266 நிறுவனங்கள் 2 சதவீதத்துக்கு கீழ் செலவு செய்திருக்கின்றன.