பொருளாதார வளர்ச்சிக்காக சிறுசேமிப்பு வட்டியைக் குறைத்தது சரியே: ஜேட்லி திட்டவட்டம்

பொருளாதார வளர்ச்சிக்காக சிறுசேமிப்பு வட்டியைக் குறைத்தது சரியே: ஜேட்லி திட்டவட்டம்
Updated on
2 min read

பிபிஎப் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்தது சரியான நடவடிக்கையே என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாக உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையை ஏற்படுத்தக் கூடியது என்று கூறினார்.

இதுகுறித்து இன்று அருண் ஜேட்லி கூறியதாவது:

"சிறு சேமிப்புகளுக்கு வரி விலக்கோடு 8.7 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் அளிக்கப்படும் வட்டி 12 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை உள்ளது. இதனால் தொழில்துறைக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 14 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விதிக்க வேண்டியிருக்கிறது.

சிறு சேமிப்புகளுக்கு அளிக்கப்படும் வட்டி மிகவும் அதிகமாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது.

உதாரணமாக பிபிஎப்-புக்கு அளிக்கப்படும் 8.7 சதவீத வட்டி மற்றும் அளிக்கப்படும் வரிச் சலுகையோடு கணக்கிடும்போது அது 12.5 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

ஆனால் சர்வதேச அளவில் 12.5 சதவீத வட்டிக்குக் கடன் கிடைக்கிறது. 12.5 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி அதை 14 சதவீதம் முதல் 15 சதவீத வட்டிக்கு விடுவது எப்படி எளிதாக இருக்கும். இந்த அளவுக்கு வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் அது தேக்க நிலை பொருளாதாரத்துக்குத்தான் வழிவகுக்கும்.

உலகின் எந்த ஒரு நாட்டிலும் சேமிப்புகளுக்கு அளிக்கப்படும் வட்டி அதிகமாகவும், கடனுக்கு விதிக்கப்படும் வட்டி குறைவாகும் இருப்பதில்லை.

சிறுசேமிப்புக்கு அளிக்கப்படும் வட்டி விகிதமும், கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை" என்றார் ஜேட்லி.

வட்டிக் குறைப்பு நடவடிக்கை மூலம் மிகவும் பிரபலமில்லாத நடவடிக்கையை அரசு எடுத்துவிட்டதாகக் கருதப்படுகிறதே, என்று கேட்டதற்கு, "கடன் தொகைக்கு 15 சதவீத அளவுக்கு வட்டி விதிக்கப்படுவதுதான் பிரபலமில்லாத நடவடிக்கை. வட்டிக் குறைப்பு நடவடிக்கை அனைவருக்கும் பயனளிக்கக் கூடியது.

வீடு கட்ட ஒருவர் வங்கியில் கடனுக்கு அணுகினால் 9 சதவீத வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வாரா? அல்லது 15 சதவீத வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வாரா?

இப்போது அளிக்கப்படும் 8.1 சதவீத வட்டி விகிதமே மிக அதிகமான வட்டி விகிதம்தான். உலகில் எங்குமே இந்த அளவுக்கு சிறுசேமிப்புக்கு வட்டி அளிக்கப்படுவதில்லை. வரி விலக்குடன் 8.1 சதவீத வரி விகிதத்தை கணக்கிட்டால் அது 12.2 சதவீதமாகும். இது மிகக் குறைந்த வட்டி விகிதம் அல்ல.

பணவீக்கம் 11 சதவீதமாக இருந்தபோது 8.7 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்போது வட்டி விகிதமும் குறைக்கப்படுவதுதான் நியாயம்.

இபிஎப் திட்டத்தில் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்க உத்தேசித்தது அதிக அளவில் தொகையை எடுப்பதைக் குறைப்பதற்கும் அதே சமயம் வரி விலக்குடன் கூடிய ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதன் மூலம் மிகுந்த ஆரோக்கியமான ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஆனால் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது இபிஎப் திட்டங்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு வரிச் சலுகை புதிய பென்ஷன் திட்டத்துக்கும் (என்பிஎஸ்) உண்டு.

ஓராண்டுக்குப் பிறகு பாருங்கள் எத்தனை பேர் என்பிஎஸ் திட்டத்தைத் தேர்வு செய்திருப்பார்கள் என்று. அரசு அளிக்கும் அதிக வட்டி திட்டங்களில் என்பிஎஸ் மிகச் சிறந்த ஒன்று" என்கிறார் அருண் ஜேட்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in