

கடந்த சில மாதங்களில் நாம் உலகத்தைச் சுற்றி வந்துவிட்டோம். உலகில் இருக்கும் ஏழு கண்டங்களில், அலாஸ்கா தவிர்த்த ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என ஆறு கண்டங்கள்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேஷியா, இஸ்ரேல், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், கனடா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, தைவான், பிரான்ஸ், பிரேசில், பிலிப்பைன்ஸ், பெல்ஜியம், பூட்டான், ரஷ்யா, வியட்நாம், நெதர்லாந்து, மலேசியா, மெக்சிகோ, ஜப்பான், ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய 32 நாடுகள்.
இந்த நாடுகளின் பின்புலம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஓரளவு புரிந்துகொண்டுவிட்டோம். பிசினஸ் என்பது கொடுக்கல், வாங்குதல் என்னும் இருவழிப் பாதை. நம் நாட்டைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
உலக பிசினஸ்மேன்கள் பார்வையில் இதுதான் இந்தியா:
இந்தியர்கள் தவறாமையை மதிப் பவர்கள். ஆனால், பெரும்பாலானோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. கடைசி நிமிடத்தில் காரணம் சொல்லாமலே சந்திப்பை ரத்து செய்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் ரத்தானதைத் தெரிவிக்காமல் உங்களை வரவழைத்து, ஏமாற்றத்தோடு திரும்பிப் போக வைக்கும் சோக அனுபவங்களும் உண்டு. முன்னரே நேரம் குறித்துக்கொண்டு போவது நல்லது. பல முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். ஆகவே, பயணத்துக்கு எத்தனை நேரம் தேவை என்று நீங்கள் சந்திக்கப்போகிறவரிடமோ அல்லது தங்கும் ஹோட்டலிலோ கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி புறப்படுங்கள்.
இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் இரவில் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினால் ஆச்சரியப்படாதீர்கள். சாதாரணமாக, அமெரிக்கா, ஐரோப்பாவில் இரவு டின்னர் மாலை 6 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள் முடிந்துவிடும். இந்தியாவில் ஆரம்பமே 9 மணிக்குத்தான். நள்ளிரவைத் தாண்டியும் நீளலாம்.
முடிவுகள் சாதாரணமாக உயர் மட்டத்தில்தான் எடுக்கப்படும். ஆகவே, முடிவெடுக்கத் தாமதங்கள் ஆகலாம். தயாராக இருங்கள். அரசுக் கட்டுப் பாடுகளும் அதிகம். அரசு விதிமுறைகள், சட்டக் கோணங்கள் உங்கள் தொழிலை எப்படி பாதிக்கும் என்று ஓரளவு தெரிந்துகொண்டு போவது நல்லது.
விசிட்டிங் கார்டுகள் பரிமாறிக் கொள்ளுதல் அவசியம். படிப்பு, பதவி ஆகியவற்றுக்குச் சமுதாயத்தில் அதிக மதிப்பு உண்டு. எனவே, விசிட்டிங் கார்டுகளில் இந்த விவரங்களைத் தருவது நல்லது. பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தமையாலும், பரவ லான ஆங்கிலக் கல்வியாலும், பெரும் பாலான பிசினஸ்மேன்களுக்கு ஆங்கில அறிவு உண்டு. ஆகவே, விசிட்டிங் கார்டுகள் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தால் போதும். வலது கையால் மட்டுமே கார்டுகளைத் தரவேண்டும்.
பாரம்பரிய பிசினஸ்மேன்களும், பெண்களும் கைகூப்பி “நமஸ்தே” சொல்லுவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இது கை குலுக்கலாக மாறியிருக்கிறது. இந்தியா பரந்து விரிந்த, பல்வேறு மதத்தினர் வாழும் தேசம். ஆகவே, பகுதிக்குப் பகுதி, மதத்துக்கு மதம், வரவேற்கும் முறை, பழகும் விதம், பெண்களுக்குத் தரும் உரிமைகள் ஆகியவை வித்தியாசப்படும். ஆகவே, யாரைச் சந்திக்கிறீர்களோ, அவர்களின் கலாச்சாரம் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டு போவது உதவியாக இருக்கும்.
சந்திக்கும்போது, கையளவு தூர இடைவெளி வைத்துக்கொள்வது நல்லது. ஓரளவு நெருக்கம் வந்தவுடன், பாராட்டும் விதமாக முதுகில் தட்டுவது அடிக்கடி நடக்கும். நீங்கள் இளவயதினராகவும், சந்திப்பவர் வயதில் மூத்தவராகவும் இருந்தால், முதுகுத் தட்டல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
``மிஸ்டர்”, “டாக்டர்”, “புரொபசர்” என்றெல்லாம் அடைமொழி தந்து விளிப்பதை விரும்புகிறார்கள். மிக நெருக்கமாகப் பழகுவார்கள். உங்கள் வயது, நீங்கள் திருமணமானவரா, உங்கள் குடும்பம் ஆகியவை பற்றி மிக சகஜமாக விவரங்கள் கேட்டால், ஆச்சரியப்படாதீர்கள். அதே சமயம், தங்களைப் பற்றிய விவரங்களைத் தயங்காமல் சொல்லுவார்கள். குடும்பம் குறித்துப் பெருமை அடித்துக்கொள்வது சர்வ சாதாரணம். கிரிக்கெட், சினிமா ஆகியவற்றின் மகாரசிகர்கள். இவை பற்றி எப்போதும் பேசலாம்.
விருந்தாளிகளுக்கு எக்கச்சக்க மரியாதை தருவார்கள். விருந்தோம்பலில் சிறந்தவர்கள். பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ஆகிய அனைத்துக்கும் அழைப்பார்கள். வீட்டு ஸ்வீட்களைக் கொண்டுவந்து கண் முன்னாலேயே சாப்பிடச் சொல்லி அன்புத் தொல்லை கொடுப்பவர்கள் அதிகம். குறிப்பாக ஐரோப்பிய பிசின்ஸ்மேன்கள் இது போன்ற வீட்டில் தயாரித்த உணவுப்பொருட்களைச் சாப்பிடத் தயங்குவார்கள். இந்தத் தயக்கத்தைப் பல இந்திய பிசினஸ்மேன்கள் புரிந்துகொண்டு நடப்பதில்லை.
இந்தியா சைவ உணவு சாப்பிடுபவர்களின் நாடு என்று பிம்பம் இருக்கிறது. இது சரியல்ல. இந்து நாளிதழ் - சி.என்.என் இணைந்து நடத்திய ஒரு கருத்துக் கணிப்பின்படி, 31 சதவீதத்தினர் மட்டுமே சைவ உணவினர். ஆகவே, பெரும்பான்மையோர் அசைவம் சாப்பிடுபவர்கள். மத நம்பிக்கைகளால், இந்துக்கள் மாட்டிறைச்சியும், முஸ்லிம்கள் பன்றி இறைச்சியும் சாப்பிடமாட்டார்கள். ஆட்டிறைச்சி, சிக்கன், மீன் ஆகியவை பிரபல அசைவ உணவுகள். மது அருந்துவது பாரம்பரியப்படி கெட்ட பழக்கமாகக் கருதப்பட்டாலும், பிசினஸ் டின்னர்களில் மது பரிமாறுவதும், அருத்துவதும் தேவையான அம்சங்களாகிவிட்டன.
ஏராளமான அலுவலகங்களில் கடவுள் படங்கள் இருக்கும். இங்கே காலணிகள் அணிந்து போகக்கூடாது. ஆகவே, காலணிகளை எங்கெங்கே கழற்றிவைக்க வேண்டும் என்று கேட்டுத் தெர்ந்துகொள்ளுங்கள். அனைத்துப் பொருட்களையும் வலது கையால் மட்டுமே வாங்கவேண்டும் என்பது இன்னொரு சம்பிரதாயம்.
வயதுக்கு மதிப்புத் தரும் சமுதாயம். ஆகவே, முதியோரை மதியுங்கள். மார்பில் கைகளைக் கட்டிக்கொண்டு பேசுதல், இடுப்பில் கைவைத்து நிற்பது ஆகியவை ஆணவச் செயல்களாகக் கருதப்படுகின்றன. சுட்டு விரல் காட்டுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், காலை யார் பக்கமாவது நீட்டுதல் ஆகியவை அநாகரிகச் செயல்கள். இவற்றைத் தவிர்க்கவும்.
பிரிட்டிஷ் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்தபோது, பிசினஸ் மீட்டிங்குகளில் கோட், டை அத்தியாவசியமானதாக இருந்தது. இன்று பாண்ட், ஷர்ட் போதும். ஷார்ட்ஸ், டி ஷர்ட் கலாச்சாரம் ஒரு சில சாஃப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமே இருக்கிறது.
பரிசுகள் வரவேற்கப்படுகின்றன. (ஓரளவுக்கு, அன்பளிப்பு என்னும் பெயரில் ஊழலும் உண்டு) பரிசுகளைச் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய வண்ணக் காகிதங்களில் பேக்கிங் செய்ய வேண்டும். இவை அதிர்ஷ்ட நிறங்களாக நினைக்கப்படுகின்றன. கறுப்பு சோகத்தின் அடையாளம். ஆகவே, வேண்டாம். பரிசுகளைத் தருபவர் முன்னால் திறந்து பார்க்கும் பழக்கம் முன்பு இல்லை. இந்த வழக்கம் இப்போது மாறி வருகிறது.
2000 ஆம் ஆண்டு, இந்திய பிசினஸ் வரலாற்றில் ஒரு மைல்கல். சாஃப்ட்வேர், அவுட்சோர்ஸிங் ஆகிய துறைகளில் இந்தியா உலக அரங்கில் முத்திரை பதித்துவருகிறது. ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று, கூகிள், ஆப்பிள், ஆரக்கிள் போன்ற அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய பதவிகள் வகிக்கிறார்கள். இதனால், அமெரிக்க தொழில் கலாச்சாரம் பரவி வருகிறது.
****
மேலே சொன்ன சில கருத்துகள் சரியல்ல என்று ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால், நம்மோடு பிசினஸ் செய்யப் போகிறவர்களின் மனங்களில் இத்தகைய அபிப்பிராயங்கள் இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, நம் அணுகுமுறையை மாற்றிக்கொள் வதுதான், புத்திசாலித்தனம், தொழிலை வளர்க்கும் வழி.
slvmoorthy@gmail.com