

இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேற எஸ்ஸார் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரூயா சகோதரர்களுக்குச் சொந்தமான எஸ்ஸார் எனர்ஜி பிஎல்சி நிறுவனம் ஏற்கெனவே லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளது. இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறும் முடிவுக்கு அதன் இயக்குநர் குழு ஞாயிற்றுக் கிழமை ஒப்புதல் அளித்தது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்ஸார் குழுமம் எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தில் பொதுமக்களுக்கு உள்ள பங்குகளை வாங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 13 கோடி சரிவிகித பங்குகள் அதாவது 27.53 சதவிகிதம் பொதுமக்கள் வசம் உள்ளது. ரூயா சகோதரர்களுக்குச் சொந்தமான எஸ்ஸார் எனர்ஜி பிஎல்சி நிறுவனத்துக்கு 71.22 சதவீத பங்கு உள்ளது.
கடந்த ஜூன் 10-ம் தேதி லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறினோம். இதைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையிலிருந்தும் வெளியேற முடிவு செய்துள்ளோம் என்று ரூயா சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுவதற்கு செபி வகுத்துள்ள விதிமுறைகள்படி அதிகபட்சமாக விற்பனையான பங்குகளின் எண்ணிக்கையின்போது இருந்த உச்சபட்ச விலை அடிப்படையில் ரிவர்ஸ் புக் பில்டிங் முறையில் பங்குதாரர்களுக்கு பணத்தை அளிக்க வேண்டியிருக்கும்.