

விஜய் மல்லையாவுக்குச் சொந்த மான சொகுசு விமானத்தை சேவை வரித்துறை ஏலம் விட முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் மே 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்பஸ் 319 ரக விமானம் பல ஆடம்பர அம்சங்களைக் கொண்டது. இந்த விமானம் தற்போது மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 25 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணிக்க முடியும்.
மிகவும் சொகுசாக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள் ளது. இந்த விமானத்தை வீடு மற்றும் அலுவலகமாக விஜய் மல்லையா பயன்படுத்தியுள்ளார். இதில் 6,000 அடி பரப்பு இடம் உள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர ஜெட் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் விலை ரூ.266 கோடியாகும். இதில் கருத்தரங்க அறை, படுக்கை அறை, குளியல் அறை என அனைத்து அம்சங்களும் உள்ளன.
வானில் பறக்கும் சொகுசு பங்களா என்றே இதை வர்ணிக் கின்றனர்.
ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2012 மற்றும் ஏப்ரல் 2012 முதல் செப்டம்பர் 2012 வரையான காலத்தில் சேவை வரி செலுத்தப்படவில்லை. இதற் காக இந்த விமானத்தை சேவை வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்காக இந்த விமானத்தை ஏலத்தில் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 2 முதல் மே 10ம் தேதி வரை இதைப் பார்வையிடலாம்.
சர்வதேச அளவில் இதற்கான டெண்டரை சேவை வரித்துறை கோரியுள்ளது.
கடந்த ஆண்டு மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம் (எம்ஐஏஎல்) 11 பேர் பயணிக்கும் வகையிலான விமானத்தை ரூ. 22 லட்சத்துக்கு ஏலம் விட்டது. இந்த விமானத்தை ஏலத்தில் எடுத்த சைலன்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அந்த விமானத்தை வாங்கி உதிரி பாகங்களாக பிரித்து விற்று விட்டது.
பயணிகளிடமிருந்து விமான பயண கட்டணமாக வசூலித்த தொகைக்கு விஜய் மல்லையா வுக்குச் சொந்தமான கிங்பிஷர் நிறுவனம் சேவை வரி செலுத்த வில்லை. மொத்தம் ரூ.32.68 கோடி சேவை வரி பாக்கி வைத்துள்ளது இந்நிறுவனம். ஒட்டுமொத்தமாக இந்நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை ரூ. 532 கோடியாகும்.
சேவை வரியை அரசின் கருவூலத்தில் செலுத்த வேண்டும். ஆனால் அவ்விதம் செலுத்தாதது 1994-ம் ஆண்டின் நிதிச் சட்டம் பிரிவு 89 (1) (டி)-ன் கீழ் விதி மீறலாகும். இதற்காக கடந்த ஆண்டே விஜய் மல்லையாவை கைது செய்ய வேண்டும் என சேவை வரித்துறை அதிகாரிகள் கோரினர். ஆனால் ரூ.50 லட்சத்துக்கான பிணை பத்திரத்தை அளித்துவிட்டு கைது நடவடிக்கையிலிருந்து விஜய் மல்லையா தப்பிவிட்டார். இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் சேவை வரித்துறை வழக்கு தொடர்ந்தது. சில ஆண்டுகளாக நிலுவையில் இந்த மனு இருந்ததால் கடந்த மார்ச் 2-ம் தேதி புதிதாக ஒரு மனுவை சேவை வரித்துறை தாக்கல் செய்தது. அதில் விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை மார்ச் 28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.