

சென்னை: பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில்களுக்கு தமிழகத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூறினார்.
இந்திய-அமெரிக்க வர்த்தக சபை சார்பில் `அமெரிக்கா-இந்தியா இடையிலான பாதுகாப்பு கூட்டு தொழில்முயற்சிகள்' என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கைத் தொடங்கிவைத்து தொழில் முதலீட்டுக் கழகத் (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசியதாவது: தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கடந்த நவம்பர் மாதம் டிக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அந்த வகையில், ராணுவம், கடற்படை, விமானப்படையின் தளவாடங்கள் உற்பத்தி வளர்ச்சிக்கு டிக் நிறுவனம் பாலமாக செயல்படும். இத்துறைக்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணர்கள் இங்கு ஏராளமாக உள்ளனர்.
தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, டிட்கோ, சிட்கோ, தொழில் வழிகாட்டி கவுன்சில் ஆகியவற்றுடன் டிக் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
வான்வழி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், ஜெனரல் எலெக்ட்ரிக் (ஜி.இ.) நிறுவனத்துடன் தமிழக அரசு அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
தமிழகத்தில் தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இது தொழில் துறையினருக்கு உதவியாக இருக்கும். இந்தியாவிலேயே ஆட்டோமொபைல் துறையின் முன்னோடி நகரமாக சென்னை திகழ்கிறது. அதனால்தான் சென்னையை `ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கிறார்கள்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறையில், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் 20 வகையான தொழில்களை அடையாளம் கண்டுள்ளோம். தொழில் துறை வளர்ச்சிக்கு உகந்த சிறந்த அரசியல் தலைமை, விரைந்து செயல்படும் அரசுத் துறையினர், தொழில்நுட்பத் திறன்மிக்க மனிதவளம், தமிழகத்தின் அமைவிடம் போன்ற அம்சங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்க பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.