Published : 01 Mar 2016 08:45 AM
Last Updated : 01 Mar 2016 08:45 AM

அனுபவியுங்கள் - இன்னமும், இன்னமும், இன்னமும்!

இந்தியாவிலேயே மிகவும் எளிமையான பணி எது...?

`என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்; என்ன வேண்டு மானாலும் கேளுங்கள். நான் செய்வதைச் செய்கிறேன்..'

என்று `சுதந்திரம்' தருகிற பணி எது...?' அமல் செய்வது பற்றி இப்போதே ஏன் கவலைப்பட வேண்டும்.... இப்போதைக்கு அறிவித்து விட்டால் போகிறது...'

என்று `தொலைநோக்கு'டன் செயல்பட ஏற்ற பணி எது...?

பட்ஜெட் தயாரிப்புதான்.

`நிலையான மற்றும் கணிக்கக் கூடிய ('predictable') வரி விதிப்பு' பற்றி சிலாகித்துச் சொல்கிறது பட்ஜெட்.

யாருக்கு அது `கணிக்கக் கூடியதாக' இருக்க வேண்டும்...? இதனால் யாருக்கு என்ன லாபம்? விளக்கமில்லை.

மிகப் பெரிய அளவில், வரி விதிப்பு முறை எளிமையாக்கப் பட்டு இருக்கிறது' என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது எந்த அளவுக்கு உண்மை யானது? விவாதத்துக்கு உரியது.

வரிச் சீர்திருத்தம் எங்களின் முன்னுரிமை என்கிறது பட்ஜெட். இது விஷயத்தில், இதற்கு முன் கண்டிராத அளவுக்கு நிறைய சாதித்து இருக்கிறோம் என்றும் பெருமைப்பட்டுக் கொள்கிறது. இருக்கட்டும். இருக்கட்டும்.

ஆனால்...? மக்களின் எதிர்பார்ப்பே வேறு.

வரிச் சுமை குறைந்து இருக்கிறதா...?

`நடுத் தெரு' வர்க்கம் பொறுத்த வரை, இல்லவே இல்லை.

வருமான வரிச் சட்டம் பிரிவு 44ADயின் கீழான, உத்தேச வரி (`ப்ரிசம்ப்டிவ் டாக்ஸ்') விஷயத்தில் சற்றே தாராளம் காட்டப்பட்டு இருக்கிறது.

தற்போது ஒரு கோடியாக இருந்த அளவு, 2 கோடிக்கு உயர்ந்து இருக்கிறது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு இது நல்ல செய்தி.

ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் வரை பெறுகிற, தொழில்முறை நிபுணர்களுக்கு (professionals), இதில் 50% லாபமாகக் கணக்கிடப் பட்டு உத்தேச வரி கட்டலாம். இது சிலருக்கு வரமாக இருக்கலாம்; பலருக்கு இதுவே, சாபமாக மாறவும் சாத்தியங்கள் உண்டு.

சிறப்புப் பொருளாதார மண்ட லங்களில் தொழில் தொடங்கு வோருக்கு 31.03.2020 வரை, வரி விதிப்பில் இருந்து விலக்கு கிடைக்கும்.

'புதிய சர்ச்சை (dispute) தீர்ப்பு முறை' கொண்டு வரப்பட்டு இருக்கிறது; வட்டி மற்றும் அபராதம் ரத்து செய்வது தொடர் பான கோரிக்கைகள், ஓராண்டுக் குள்ளாகத் தீர்த்து வைக்கப்படும்; முறையீட்டுக்கு (appeal) செல்லும் வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய தொகையில் 15% செலுத் தினால், மீதமுள்ள தொகைக்கு தடையாணை வழங்கப்படுவது கட்டாயம் ஆகும்.

கணக்கில் காட்டப்படாத வருமானம் உள்ளவர்கள், தாமாக முன்வந்து அறிவிக்கும் பட்சத்தில், அந்த வருமானம் மீது வருமான வரி - 30% `சர்சார்ஜ்' 7.5% மற்றும் அபராதம் 7.5% சேர்த்து 45% கட்டினால், மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம்.

2014- 15 நிதி ஆண்டில் ஐந்து கோடிக்கு மிகாத விற்பனை ('டர்ன்-ஓவர்') கொண்ட நிறுவனங்களுக்கு, `கார்ப்பரேட்' வரி, 30%இல் இருந்து 29%ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. (சர்சார்ஜ் & `செஸ்' தனி)

என்ன பொருள்...?

அதிகபட்ச அளவான ஐந்து கோடி ரூபாய் `டர்ன்-ஓவர்' இருப்பதாய்க் கொள்வோம்.

இதில் 8%, வரிக்கு உட்பட்ட வருமானம். எனில், 40 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டும். முன்னர் இருந்தது - 30%; இப்போது, 29% ஒரு சதவீதம் குறைந்துள்ளது. ஆக, 40,000 ரூபாய் அளவுக்கு வரி குறையும்.

இது கணிசமான வரி நிவாரணம்தானா..? சம்பந்தப்பட்ட (சிறு)தொழில் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

அதை விடவும், இவற்றில் எதுவும், சம்பளதாரர்களுக்கு எவ் வகையிலும் பயன் தரப் போவது இல்லை.

தற்போதுள்ள 2,50,000 என்கிற வருமான வரிக்கு உட்படும் அளவு உயர்த்தப்படவில்லை.

ஐந்து லட்சம் வரை உயர்த்தலாம் என்று ஒரு காலத்தில் பேசியதெல்லாம் `போயே போச்சு'. இன்றைய பட்ஜெட்டில், ஒரு நூறு ரூபாய் கூட உயர்த்தவில்லை!

`ரிபேட்' எனும் வரித்தள்ளுபடி தற்போதுள்ள ரூ.2,000இல் இருந்து, ரூ.5,000 ஆகியுள்ளது.

வீட்டுக் கடன் மீதான கழிவு, ரூ 24,000இல் இருந்து ரூ.60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, 36,000க்கான வரி, (10% தளத்தில் இருப்பவர்கள் என்றால்) செலுத்த வேண்டிய வரியில் ரூ.3600 அளவுக்குக் குறையலாம்.

ஆக, 3000 + 3600 = ரூ.6600 வரை அதிகபட்ச நிவாரணம் கிடைக் கலாம்.

"வரும் நிதி ஆண்டில், தனி நபர் மூலம் பெறப்படும் வரி வருவாய், 18% சதவீதம் உயரும்" மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, நிதி அமைச்சக அதிகாரிகள், நடத்திய பத்திரிகையாளர் சந்திப் பில், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இது.

யார் இந்த `தனி நபர்கள்'...?

தம் வருமானத்தில் இருந்து ஒரே ஒரு ரூபாயைக் கூட மறைக்காமல்,

அத்தனைக்கும் முறையாக முழுமையாக குறித்த நேரத்தில் வரி செலுத்துகிற, சம்பளதாரர்கள்தாம்.

மிகப்பெரிய வரி செலுத்தும் பிரிவாக வளர்ந்து வருகிற, தமது கல்வி, கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறி வருகிற, சமூகத்தின் அத்தனை தேவைகளையும் சேவைகளையும் முன் நின்று செயல்படுத்திக் கொண்டு வருகிற ஒரு பிரிவினரை வஞ்சிப்பது

எந்த விதத்தில் நியாயம்...?

`நேர்மைக் குறைவானவர் களுக்கு, தாமாக முன்வந்து வரி கட்ட, ஒரு திட்டம்' அறிவிக்கலாம்; நேர்மையான சம்பளதார்களை நட்டாற்றில் விடலாம்' என்பது எந்த வகையில் அறிவுபூர்வமான அணுகுமுறை...?

ஆக, இந்த ஆண்டு பட்ஜெட், மிக உரக்கச் சொல்கிற செய்தி இதுதான்:

`நீங்கள் நேர்மையாக வரி செலுத்துபவரா...? நன்றாக `அனுபவியுங்கள்'!!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x