

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மற்றும் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.1.8 கோடியும், ஐசிஐசிஐக்கு ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பிஎன்பி அதன் பங்குகளை அடகு வைப்பது தொடர்பான வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டது. அதாவது, அந்த வங்கி தான் கடன் வாங்கிய நிறுவனங்களின் பங்குகளை, அந்த நிறுவனங்களின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தின் 30%க்கும் அதிகமான தொகையை அடமானமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனால், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.1.8 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.
அதேபோல், ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இரண்டு வங்கிகளுமே ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளைக் காட்டியுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.