கார் விற்பனை தொடர்ந்து சரிவு

கார் விற்பனை தொடர்ந்து சரிவு
Updated on
1 min read

தொடர்ந்து இரண்டாவது மாதமாக கார் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. கார் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 4.21 சதவீதம் சரிந்துள்ளது. ஜாட் இட ஒதுக்கீடு போராட்டம், பட்ஜெட்டுக்கு பிறகு விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த தகவலை இந்திய ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (எஸ்ஐஏஎம்) வெளி யிட்டுள்ளது. மேலும் உள்நாட்டு பயணிகள் கார் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 1,64,469 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த வருடம் இதே மாதத்தில் 1,71,703 கார்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சரிவு குறித்து எஸ்ஐஏஎம் துணை இயக்குநர் ஜெனரல் சுகாட்டோ சென் கூறியதாவது: ஜாட் இட ஒதுக்கீடு பிரச்சினை ஆட்டோமொபைல் துறையை பாதித்துள்ளது. குறிப்பாக மாருதி சுஸூகி நிறுவனங்கள் உற்பத்தி சார்ந்த குறைபாடுகளை சந்திக்க நேர்ந்தது. பட்ஜெட்டில் உற்பத்தி வரி (கலால் வரி) குறைக்கப்பட்டால் கார் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பால் சில விநியோகஸ்தர்கள் ஆர்டர் எடுக்கவில்லை. இது போன்ற காரணங்கள்தான் விற்பனை சரிவுக்கு காரணம் என்று தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் கார்களுக்கு உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வரி 1 முதல் 4 சதவீதம் பல விதமான ஆட்டோமொபைலுக்கு விதிக்கப் பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள சொகுசு கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 1,69,527 கார்கள் விற்பனை யாகியுள்ளன. ஆனால் இந்த வருடம் இதே மாதத்தில் விற்பனை 1,68,303-ஆக குறைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தின் விறபனை கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது 3.94 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் பிப்ரவரி மாதத்தில் 87,149 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை கடந்த வருடத்தில் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடும் போது இந்த வருட விற்பனை 12.7 சதவீதம் குறைந்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 15.61 சதவீதம் குறைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் விற்பனை 20.21 சதவீதம் குறைந்துள்ளது.

பயன்பாட்டு வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கடந்த பிப்ரவரி மாதத்தில் 26.99 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,805 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 22,612 ஆக அதிகரித்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் விற்பனை கடந்த பிப்ரவரியில் 12.76 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015-ம் ஆண்டு இதே மாதத்தில் 12,08,084 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13,62,219-ஆக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் விறபனையும் கடந்த மாதம் 11.05 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in