

அடுத்த நிதி ஆண்டில் (2016-17) பங்கு விலக்கல் மூலம் 56,500 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில் 36,000 கோடி ரூபாய் பங்குகளை விற்பதன் மூலமும், 20,500 கோடி ரூபாய் உத்தி சார்ந்த விற்பனை மூலமும் திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் 69,500 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இதுவரை 25,312 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்ட முடிந்தது. பங்குச்சந்தை சூழ்நிலைகள் சரியில்லாததால் நிர்ணயம் செய்த தொகையை திரட்ட முடியவில்லை.
இதுவரை ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மட்டுமே நிதி திரட்டப்பட்டிருக்கிறது. ஆர்.இ.சி.(ரூ.1,608கோடி), பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ரூ.1,671 கோடி), டிரெட்ஜிங் கார்ப் ஆப் இந்தியா (ரூ.53.33 கோடி) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ரூ. 9,369 கோடி), இன்ஜினீயர்ஸ் இந்தியா (ரூ.640 கோடி) மற்றும் என்டிபிசி (ரூ.5,030 கோடி) ஆகிய நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டிருக்கிறது.
தொடந்து ஆறாவது ஆண்டாக பங்கு விலக்கலுக்கு நிர்ணயம் செய்த இலக்கை மத்திய அரசால் அடைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.