

மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதிப் பற்றாக்குறையின் தரம் மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டார். அவரது பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
பற்றாக்குறையைக் கட்டுப் படுத்துவது மட்டுமல்ல, அதை மிகுந்த தரத்துடன் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
அதிகம் செலவிட்டு, அதிக வருவாய் ஈட்டியதன் மூலம் பற்றாக்குறையை 3.9 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தி யுள்ளோம். இதிலிருந்தே பற்றாக்குறையின் தரம் மிக அதிகம் என்பது புரியும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். பட்ஜெட் மதிப்பீடுகளைக் காட்டிலும் திருத்திய மதிப்பீடுகள் அதிகமாக இருந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரிவினருக்கு அதிக சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மற்றும் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. விவசாயிகளுக்காக பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ஏழைகளுக்கு முன்னுரிமை
முக்கியமான துறைகளுக்கு அதிகம் செலவிட்டுள்ளோம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு (பிபிஎல்) சமையல் எரிவாயு சிலிண்டரும், ஏழைகளுக்கு மானியமும், பிபிஎல் குடும்பங்களுக்கு மருத்துவ வசதித் திட்டமும் வழங்கப்பட்டுள்ளன.
உரிமை கோராத பண பிரீமியத் தொகை மூத்த குடிமக்களுக்கு செலவிடப்படும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.