விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா தடைக்குப் பிறகு விற்பனையை நிறுத்தியது புராக்டர் அண்ட் கேம்பிள்
அரசு தடைக்குப் பிறகு விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் (பாராசிட்டமால்+பினைல்பிரைன்+கஃபைன்) மீது மத்திய அரசு உடனடி தடை உத்தரவு பிறப்பித்ததால் விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா என்ற தலைவலி, காய்ச்சல் மாத்திரை உற்பத்தி, விற்பனை நிறுத்தப்பட்டது.
மார்ச் 10-ம் தேதியன்று அரசு இதழ் அறிவிக்கையின் படி இருமல் மருந்தான குளோரோபினமின் மாலியேட்+கோடைன் சிரப் சேர்க்கை மருந்து வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
திங்களன்று ஃபைசர் மற்றும் அபாட் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது இருமல் மருந்தான கோரக்ஸ் மற்றும் பென்சிடில் ஆகியவற்றை முறையே விற்பனை மற்றும் உற்பத்தியை நிறுத்தி விட்டன.
டிசம்பர் 31-ம் தேதி முடிந்த 9 மாத காலத்தில் மட்டும் ஃபைசரின் கோரெக்ஸ் இருமல் மருந்து சுமார் 176 கோடி ரூபாய் அளவுக்கு விற்றுத் தீர்த்துள்ளது.
30 ஆண்டுகளாக இந்தியாவில் மருத்துவர்களால் அனைத்து மாநிலங்களிலும் பரிந்துரைத்துத் தீர்க்கப்பட்ட கோரக்ஸ் இனி இல்லை.
இத்தனையாண்டு காலம் பாதுகாப்பாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மருந்துகளைத் தடை செய்வதன் மூலம் தங்கள் நிறுவனங்களின் லாப விகிதம் பாதிப்படையும் என்பதோடு, இவற்றுக்கான மாற்று மருந்து, அதாவது டி.சி.ஜி.ஐ. அனுமதி கொடுத்துள்ள மருந்துகள் எளிதில் மக்களுக்கு கிடைக்குமா என்பது குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாக நிறுவனங்கள் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய மருந்துச் சந்தைகளில் மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான சேர்க்கைகளில் மருந்துகள் புழங்கி வருவது பற்றி ஏற்கெனவே நிறைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 344 அதீத மருந்துக் கலவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
