

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மின் வெட்டு காரணமாக தொழில்துறை உற்பத்தி 40 சதவீத அளவுக்குச் சரிந்ததாக தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பான அசோசேம் குறிப்பிட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 40 சதவீத பாதிப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் வட மாநிலங்கள், தென் பகுதி, மேற்கு பிராந்தியங்களில் நிலவிய மின்வெட்டு காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 30 சதவீத அளவுக்குக் குறைந்தது. இந்த அளவு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 35 சதவீதம் முதல் 40 சதவீத அளவுக்கு உயர்ந்தது. குறிப்பாக மூன்று பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இது தெரிய வந்ததாக அசோசேம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழில்துறையினர் 20 முதல் 25 சதவீத மின்வெட்டை எதிர் கொண்டனர்.
இம்மூன்று பிராந்தியங்களிலும் கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவியது. அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மின்வெட்டு நிலவிய போதிலும் மழை பெய்து மின் விநியோகத்தைப் பாதித்தது என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.
முன்னணி மாநிலங்களில் நிலவிய மின் விநியோகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோசேம் இந்த அட்டவணையைத் தயாரித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மிக அதிகபட்ச மின் வெட்டு நிலவியது. தினசரி 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம்வரை அங்கு மின்வெட்டு இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் இருந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி 45 சதவீத அளவுக்கு பாதிக்கப்பட்டது என்று அசோசேம் செயலர் டி.எஸ். ரவாத் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேச மாநில மின்தேவை 8,282 எம்யு. ஆனால் அங்கு கிடைத்ததோ 7,358 மெயு-தான் பற்றாக்குறை 11.2 சதவீதமாகும். ஆந்திரப் பிரதேசத்திலும் நிலைமை மேம்பட்டதாக இல்லை. அங்கு பற்றாக்குறை 12.1 சதவீதமாக இருந்தது.