

இந்திய பார்மா துறையில் கடந்த நிதி ஆண்டில் (2013-14) மிக மந்தமான வளர்ச்சியே காணப்பட்டது. இத்துறையில் 1.2 சதவீத வளர்ச்சி காணப்பட்டதால் ஏற்றுமதி வருமானம் 1,484 கோடி டாலரை மட்டுமே ஈட்டியுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (யுஎஸ்எப்டிஏ) விதிக்கும் அறிவுசார் சொத்துரிமை (ஐபிஆர்) விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால் இத்துறையின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலைமை நீடித்தால் நடப்பு நிதி ஆண்டில் (2014-15) நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2,500 கோடி டாலரை ஏற்றுமதி வருமானமாக இத்துறை ஈட்டுவது கடினம் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட பார்மா துறை ஏற்றுமதி வருமானம் குறித்த தகவலில் இத்துறை 1,466 கோடி டாலரை வருமானமாக (2012-13-ம் நிதி ஆண்டு) ஈட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2013-14-ம் நிதி ஆண்டில் இத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த வளர்ச்சியாகும். இதற்கு முன்பு 2009-10-ம் நிதி ஆண்டில் இத்துறை வளர்ச்சி குறைவாக இருந்தது. இருப்பினும் அப்போது 5.9 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது. 2000-வது ஆண்டில் இத்துறை 7 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது.
கடந்த நிதி ஆண்டில் பார்மா துறையில் வளர்ச்சி சரிந்ததற்கு அமெரிக்கா விதித்த நிபந்தனைகள்தான் காரணம் என்று பார்மெக்சில் (பார்மா ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில்) செயல் இயக்குநர் பி.வி. அப்பாஜி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பாரபட்சமாக நடத்தும் வகையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை விதிகள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசை அந்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிர்பந்தப்படுத்தி வருகின்றன.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்வது அமெரிக்காவுக்குத்தான். இதற்கு அடுத்தபடியாக பிரிட்டன் உள்ளது. மொத்த மருந்து ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நிலவும் அறிவுசார் சொத்துரிமை விதிகளை அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார். அதிலும் குறிப்பாக பார்மா துறையில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஹைதராபாதில் செயல்படும் நாட்கோ பார்மா நிறுவனம் புற்றுநோயைக் குணப்படுத்தும் பேயர் நிறுவனத்தின் நெக்ஸாவேர் மருந்தை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான கட்டாய லைசென்ஸை 2012-ம் ஆண்டு இந்தியா அளித்தது. இதற்கு அமெரிக்க பார்மா நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அமெரிக்காவைத் தொடர்ந்து வியத்நாமும் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் மருந்துப் பொருள்கள் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டது. இந்திய மருந்துப் பொருள்களுக்கு வியத்நாமும் கட்டுப்பாடு விதிக்குமேயானால் அது இத்துறை ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதிக்கும் என்று இந்திய பார்மா கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வியத்நாம் எழுப்பியுள்ள சந்தேகங்கள் அதாவது மருந்து தயாரிப்பில் பின்பற்றப்படும் தரம் குறித்த விஷயங்களை நிவர்த்தி செய்வதற்கான பணிகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்டுள்ளதாக அப்பாஜி தெரிவித்தார்.
இத்தனை இடையூறுகளுக்கு இடையிலும் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தரமான மருந்துகளை கட்டுபடியாகும் விலையில் உலகம் முழுவதற்கும் சப்ளை செய்வதாகக் குறிப்பிட்ட அப்பாஜி, நடப்பு நிதி ஆண்டில் இத்துறை 12 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.