

கடந்த அக்டோபர் முதல் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவுக்கு 390 கோடி பிரைவேட் ஈக்விட்டி முதலீடு வந்திருக்கிறது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரைவேட் ஈக்விட்டி முதலீடு உயர்ந்து 1,950 கோடி டாலராக இருக்கிறது. இந்த தகவலை பிடபிள்யூசி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
159 முதலீடுகள் மூலம் இந்த தொகை இந்தியாவுக்கு வந்திருப்பதாக பிடபிள்யூசி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இந்தியாவின் பேரியல் பொருளாதாரம் மேம்பட்ட அளவில் இருக்கிறது. நடப்பு கணக்கு மற்றும் நிதிப்பற்றாக் குறை கட்டுக்குள் இருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கிறது. பணவீக்கம் 5 சதவீதத்துக்குள் இருக்கிறது. இந்த சாதகமான சூழலால் பிரைவேட் ஈக்விட்டி முதலீடுகள் உயர்ந்துள்ளதாக பிடபிள்யூசி நிறுவனத்தின் சஞ்சிவ் கிருஷ்ணன் தெரிவித்தார்.
துறை வாரியாக பார்க்கும் போது ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் அதிக முதலீடுகள் வந்துள்ளன.
93 முதலீடுகள் மூலம் 130 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது. இதற்கடுத்து வங்கி மற்றும் நிதிச்சேவை பிரிவில் 10 முதலீடுகள் மூலம் 91 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது.மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில் 41.4 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது.
மண்டல வாரியாக பார்க்கும் போது மும்பை பகுதியில் 190 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது. பெங்களுரூ பகுதியில் 73.3 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது.
சஞ்சீவ் கிருஷ்ணன் மேலும் கூறும்போது நடப்பாண்டில் நிதிச்சேவைகள், டெக்னாலஜி மற்றும் ஹெல்த்கேர் பிரிவில் முதலீடுகள் வரும். குறுகிய காலத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் நிதி திரட்டுவது சவாலாக இருக்கும் என்றார்.