

கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்காக கொடுத்த கடன்களை திருப்பி அளிக்காத நிலையில் வங்கிகள் மல்லையாவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து, விமான எரிபொருள் விலை குறைந்து வரும்போது கிங்பிஷர் விமானம் பறக்க முடியவில்லையே என்பதே தனது வருத்தம் என்று கூறியுள்ளார்.
கடன்களை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் யு.பி. குழுமத்தின் புரொமோட்டரான மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்குவது மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி புதனன்று கடன் மீட்பு தீர்ப்பாயத்தை அணுகியுள்ளது.
இந்த வேளையில் மல்லையாவின் கவலை என்னவென்றால், “எனக்கு பெரிய வருத்தங்கள் எதுவும் இல்லை, ஆனால், இன்றைய தினங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்து, விமான எரிபொருள் விலை குறைந்துள்ள போது கிங்பிஷர் விமானங்கள் பறக்கவில்லை என்பது எனது ஒரே வருத்தமாக உள்ளது” என்றார்.
2014-ம் ஆண்டு மத்திய மாதங்களில் உலகச் சந்தையில் கச்சா விலையில் உச்சம் கண்ட பிறகே 75% விலை சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், கச்சா விலை குறைந்தாலும் அதன் முழு பயன் மக்களுக்கோ, விமானச் சேவை நிறுவனங்களுக்கோ சென்றடையவில்லை என்று விமான நிறுவனங்கள் சில அதிருப்தி தெரிவித்துள்ளன என்றாலும் விமான எரிபொருள் விலை 30-40% குறைந்துள்ளது.
மல்லையா அவரது உச்ச வர்த்தக காலக்கட்டத்தில், “கிங் ஆஃப் குட் டைம்ஸ்” என்று அழைக்கப்பட்டவர். இவர் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பொறுப்பை சமீபத்தில் உதறினார். இதன் பெரும்பான்மை பங்குகளை அவர் பிரிட்டன் மதுபான நிறுவனமான டயாஜியோவுக்கு விற்றார். டயாஜியோ நிறுவனம் மல்லையாவுக்கு 75 மில்லியன் டாலர்கள் கொடுக்க ஒப்புக் கொண்டது. இதற்கான ஒப்பந்தமும் முடிவுற்ற நிலையில் சுமார் ஆயிரம் கோடிக் கணக்கான கடன்களை அவர் வங்கிக்கு திருப்பிச் செலுத்தவில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி உட்பட 3 வங்கிகள் அறிவித்தன.
ஒருகாலத்தில் ஆடம்பர விமான சேவை என்று பெயரெடுத்த கிங்பிஷர், அக்டோபர் 2012-ல் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமானநிலையங்களுக்கு பெரிய அளவில் கடன் தொகை நிலுவையால் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவருடைய நீண்ட தொழில் வாழ்க்கை பற்றி அவரிடம் கேட்ட போது, “நான் இந்தியாவின் மிகப்பெரிய மதுபான நிறுவனத்தை கட்டமைத்தேன். இந்தியாவின் மிகப்பெரிய பியர் பான நிறுவனத்தைக் கட்டமைத்தேன், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தவறாக போய் முடிந்தது.
முட்டாள்தனமான காரணங்களுக்காக கிங்பிஷர் மூடப்படவில்லை. உண்மையான காரணங்கள் உள்ளன. அது சரியாகப் போகவில்லை, வாழ்க்கையில் உயர்ச்சி தாழ்வுகள் இருக்கவே செய்யும். கடைசியில் நான் பெருமையடைவதற்குப் போதுமான விஷயங்கள் உள்ளன” என்றார்.