

கிரிப்டோகரன்சி விவகாரத்தில் இந்தியாவில் மிகவும் தீவிரமான விவாதங்கள் தேவை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுடிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இப்போது பிட்காயின் 67,089 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. ஓராண்டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அரசு இன்னும் இயற்றவில்லை. அதற்கான முயற்சிகளில், துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கெனவே கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் கிரிப்டோகரன்சிகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகவும் தீவிரமான விவாதங்கள் தேவை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது கூறியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், "பெரிய பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையின் பார்வையில் எங்களுக்கு தீவிரமான கவலைகள் இருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் கருத்தில் மிகவும் ஆழமான உண்மைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளில் பொது இடத்தில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் தீவிரமான விவாதங்கள் நடைபெறவில்லை. இதனை நானும் இன்னும் பார்க்கவில்லை. தனியார் மெய்நிகர் நாணயங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை அரசாங்கம் உருவாக்குகிறது.’’