முதலீட்டு வாய்ப்புகளில் குஜராத் முதலிடம்

முதலீட்டு வாய்ப்புகளில் குஜராத் முதலிடம்
Updated on
1 min read

முதலீடுகளுக்கான வாய்ப்புகளில் இந்திய அளவில் குஜராத் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய பயன்பாட்டு பொருளாதார தேசிய குழு (NCAER) மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்துக்கு அடுத்து முதலீட்டுக்கான வாய்ப்பு உள்ள மாநிலங்களாக டெல்லி மற்றும் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்கள் உள்ளன.

20 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசம் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முக்கியமாக முதலீட்டுக்கான முக்கிய தூண்களாக பார்த்ததும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ள பணியாளர்கள், உள்கட்டமைப்பு, பொருளாதார சூழ்நிலை, அரசு நிர்வாகம், மற்றும் அரசியல் சூழ்நிலைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும் 51 புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அரசு நிர்வாகம் மற்றும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலையில் பார்த்ததும் தெரிந்து கொள்ளும் வகையில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார சூழ்நிலை விஷயத்தில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது. தொழிலாளர்கள் மூலம் ஏற்படும் தொழில் பிரச்சினைகள் விஷயத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

பீஹார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களும் குறிப்பிடத்தக்க வகையில் முதலீடுகளை ஈர்த்துள்ளன என்று இந்த பட்டியல் கூறுகிறது.

இந்த ஆய்வு மேற்கொண்ட தேசிய பயன்பாட்டு பொருளாதார தேசிய குழுவின் மூத்த ஆய்வாளரான இந்திரா ஐயர் குறிப்பிடும்போது கடந்த ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையை விட இந்த அறிக்கை வேறுபட்டது. உலக வங்கி மேற்கொண்ட ஆய்வு பல நடைமுறைகள் மற்றும் பரிவர்த்தனைகள் அடிப்படையில் இருந்தது. என்சிஏஇஆர் அறிக்கை மாநில அளவிலான தொழில் வாய்ப்புகளுக்கான அரசின் கொள்கைகள் மற்றும் பக்கபலமாக கட்டமைப்புகள் விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டது என்று குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை குறித்து பேசியுள்ள தொழில் கொள்கைகள் மற்றும் மேம்பாடு துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் இந்த அறிக்கை உலக வங்கி அறிக்கையிலிருந்து முழுவதும் வேறுபட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த அறிக்கை தொழில் தொடங்குவதற்கு முக்கிய தடையாக இருக்கும் ஊழல் மற்றும் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்குவது சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்குவது உள்ளிட்ட விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த தடைகளை களைகிற விஷயங் களில்தான் தொழில் கொள்கை மற்றும் மேம்பாடு துறையும் கவனம் செலுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும் இந்த மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்தும் சம்பந்தபட்ட மாநிலங்கள் கவனம் செலுத்தி அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வு 21 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in