

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.-வாக யாரை நியமிக்கப் போகிறார்கள் என்று பல மாதங்களாக நிலவி வந்த யூகத்துக்கு வியாழக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 46 வயதான விஷால் சிக்காவை இன்போசிஸின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இயக்குநர் குழு நியமித்திருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் அல்லாத ஒருவர் சி.இ.ஓ.-வாக நியமிக்கப்படுவது இதுதான் முதல் முறை. மேலும் இவர் இன்போசிஸ் நிறுவனத்திலும் வேலை செய்ய வில்லை. எஸ்.ஏ.பி. நிறுவனத்தில் வேலை செய்த இவர் கடந்த மாதம் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டார். இவர் எஸ்ஏபி ஹனா தளத்தின் மூளை என்று சொல்லப்படுபவர். இயக்குநர் குழுவில் ஜூன் 14-ம் தேதி இணைகிறார்.
நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஆகஸ்ட் 1-ம் தேதி ஏற்றுக்கொள்கிறார். மேலும் தற்போதைய தலைவர் யூ.பி.பிரவீன் ராவை தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (சி.ஒ.ஒ) நியமிக்க இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது. இது ஜூன் 14-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மேலும் நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் துணை சேர்மன் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஜூன் 14-ம் தேதி தானாக முன்வந்து பதவி விலகுகிறார்கள். இருந்தாலும் இவர்கள் இருவரும் அக்டோபர் 10-ம் தேதி வரை இயக்குநர் குழுவில் இருப்பார்கள்.
நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்துக்கு வரும்போது தனது மகன் ரோஹன் மூர்த்தியை நிறுவனத்துக்கு எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டெண்டாக அழைத்து வந்தார். இப்போது அந்த பதவி நீக்கப்பட்டுவிட்டது. அதனால் ரோஹன் மூர்த்தியும் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் வெளியேறுகிறார்.
இது குறித்து பேசிய நாராயண மூர்த்தி, சிக்கா என்றால் பணம், அதிக பணம் என்று அர்த்தம். பணம் மற்றும் அறிவு இரண்டும் சேர்ந்து இருக்கும் நபர்கள்தான் இன்போசிஸுக்கு தேவை. விஷால் மற்றும் அவரது குழு இன்போசிஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓய்வுக்கு பிறகு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு என் குடும்பம் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவிடப்போகிறேன் என்று நாராயண மூர்த்தி தெரிவித்தார். படிப்பதற்கு நிறைய புத்தகங்களும் இருக்கின்றன என்றார் அவர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு, வர்த்தகத்தின் இடையே உயர்ந்தாலும் முடியும் போது 0.57 சதவீதம் சரிந்து 3,175 ரூபாயில் முடிவடைந்தது.
விஷால் பற்றி...
கணிப்பொறி அறிவியலும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சிலிகான் பள்ளத்தாக்கில் பிரபலமான நபர். படித்து முடித்த பிறகு ஜெராக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு தனது சகோதரருடன் சேர்ந்து சொந்த நிறுவனம் ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தை பெரிகிரின் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன் பிறகு எஸ்ஏபி. நிறுவனத்தில் இணைந்தார்.