

கனரக மற்றும் கார்களுக்கான டயர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் இருசக்கர வாகனங்களுக்கான டயர்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஆலை மற்றும் ஹங்கேரியில் உள்ள ஆலையில் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஹங்கேரியில் உள்ள ஆலை யில் இருசக்கர வாகனங்களுக் கான டயர்கள் தயாரிக்கப்படும். இந்த ஆலையிலிருந்து ஜனவரி 2017-ல் டயர்கள் வெளிவரும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நீரஜ் கன்வர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஆலை நாளொன்றுக்கு 6 ஆயிரம் டயர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. இதை 12 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலையில் டிரக் மற்றும் பஸ்களுக்கான ரேடியல் டயர்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆட்டோமொபைல் துறையில் அனைத்து வாகனங்களுக்குமான டயர்களைத் தயாரிக்கும் நோக்கில் தற்போது இரு சக்கர வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இரு சக்கர வாகன டயர்களுக்கான சந்தை விரிவடைந்து வருவதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
முதல் கட்டமாக பிற நிறுவனங்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களுக்கான டயர்களைத் தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாகவும் பின்னர் சந்தையில் ஸ்திரமான வளர்ச்சி எட்டப்பட்ட நிலையில் எந்த ஆலையில் இருசக்கர வாகனங்களுக்கான டயர்களைத் தயாரிப்பது என்று முடிவு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.