Published : 11 Nov 2021 04:32 PM
Last Updated : 11 Nov 2021 04:32 PM

ஆன்லைனில் இனி விமானப் போக்குவரத்து இயக்குநரக சேவைகள்

புதுடெல்லி

விமான பயிற்சி உள்ளிட்ட விமானப் போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகள் இனி இ-ஜிசிஏ ஆன்லைனில் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் பல சேவைகளை ஆன்லைன் மூலம் இனி விண்ணப்பிக்கலாம் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக நடைமுறையை மத்திய அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்

விடுதலையின் வைர விழாவை நாடு கொண்டாடும் வேளையில், விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக தளத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில், விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால், விமான போக்குவரத்து துறை தலைமை இயக்குனர் அருண் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியல் அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கை பின்பற்றி, விமான போக்குவரத்து துறை தலைமை இயக்குனரகம் மின்னணு-நிர்வாக தளத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் விமான போக்குவரத்து துறை இயக்குரகத்தின் 70 சதவீத பணிகள் மற்றும் செயல்பாடுகள், அதாவது 99 சேவைகள் முதல் கட்டமாக தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டங்களில் 198 சேவைகள் தானியங்கிமயமாக்கப்படும். இந்த ஒற்றை சாளர முறையிலான மின்னணு தளம் செயல்பாட்டு திறன் குறைபாடுகளை குறைத்து மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நபர்களின் தலையீடு குறைக்கப்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடு மேம்படும். கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையிலிருந்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கு ஒரு முன்னுதாரண மாற்றத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக விமான போக்குவரத்து தலைமை இயக்குரகத்துக்கு பாராட்டுக்கள். இந்த மின்னணு நிர்வாக முறை மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவது குறித்து ஆய்வு செய்யப்படும். அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.

இந்த திட்டம், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் சேவை விநியோக கட்டமைப்புக்கு வலுவான அடித்தளத்தை வழங்கும். பல மென்பொருட்களின் பயன்பாடுகள், பிராந்திய அலுவலகங்களுடனான இணைப்பு, இணையதளம் மூலம் தகவல் பகிர்வு, ஆன்லைன் மூலம் பாதுகாப்பான சூழலில் விரைவான சேவை உட்பட இந்த மின்னணு தளம் அனைத்துவித தீர்வுகளையும் வழங்கும்.

இந்த திட்டம் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் பலவித சேவைகளின் திறன்களை மேம்படுத்தும். வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும். டிசிஎஸ் மற்றும் பிடபிள்யூசி போன்ற நிறுவனங்களின் சேவைகளுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விமான பைலட்டுகள், பராமரிப்பு பொறியாளர்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், விமான நிலைய இயக்குனர்கள், விமான பயிற்சி அமைப்புகள், பராமரிப்பு மற்றும் வடிவமைப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இனி இ-ஜிசிஏ ஆன்லைனில் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் பல சேவைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை பெறலாம். விமானிகள் மற்றும் பராமரிப்பு பொறியாளர்களுக்கு தேவையான தகவல்களை அறிய கைப்பேசி செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இ-ஜிசிஏ நடவடிக்கை, விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தின் டிஜிட்டல் மாற்றத்துக்கான பயணத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். இது அனைத்து தரப்பினரின் அனுபவத்தை மேம்படுத்தும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x