

வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் தொகையை அதிக அளவில் அரசாங்க பத்திரங் களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
தற்போது பிஎப் தொகையில் 50 சதவீதம் வரை அரசாங்க பத்திரங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த அளவை 65 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பிஎப் அறங்காவலர் குழு கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. அப்போது இதுகுறித்த முடிவு எடுக்கப்படும். கட்டுமான திட்டங்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
அதேசமயத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதும் தொடரும். 65 சதவீதம் அரசு பத்திரங்களில் முதலீடு செய்த பிறகு மீதமுள்ள தொகை தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.
நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திடம் 50,000 கோடி ரூபாயை முதலீடு செய்வது குறித்து பிஎப் அமைப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இருந்தாலும், இது குறித்து பிஎப் அமைப்பு இன்னும் முடிவெடுக்கவில்லை. பிஎப் அமைப்பு 8.75 சதவீதம் வட்டி கேட்கிறது.
மேலும் பிஎப் தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 5,920 கோடி ரூபாய் பிஎப் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. பங்குச்சந்தை சூழ்நிலை சரியில்லாததால் 9.54 சதவீதம் மதிப்பு சரிந்துள்ளது. பிப்ரவரி 29-ம் தேதி நிலவரப்படி 5,355 கோடி ரூபாய் மட்டுமே இருக்கிறது. இதனால் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் அதிகபட்சம் 15 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று நிதி அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக கிடைக்கும் டெபாசிட் தொகையில் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பிஎப் அமைப்பு முடிவெடுத்திருக்கிறது.
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் நிதி ஆண்டில் 1.12 லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பிஎப் அமைப்பு 8.5 லட்சம் கோடி ரூபாயை கையாளுகிறது. 5 கோடிக்கும் மேலான சந்தாதாரர்கள் உள்ளனர்.