

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் இந்த வகை சிலிண்டர் ரூ.2,133க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.915.50க்கு விற்பனையாகிறது.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இன்று நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இனி சென்னையில் ஒரு வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டரின் விலை 2,133 ரூபாயாக இருக்கும். டெல்லியில் இதன் விலை 2000.50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. முன்னதாக, இது ரூ.1734 ஆக இருந்தது.
மும்பையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.1950க்கும், கொல்கத்தாவில் ரூ.2073.50க்கும் விற்பனை செய்யப்படும்.
மாதாமாதம் ஏற்றம்:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதாமாதம் உயர்த்தும் முறை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. அதன்படி பிப்ரவரி 4 ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15 ஆம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. அதே மாதம் மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.
பின்னர் மார்ச் மாதம் 1 ஆம் தேதி மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சமையல் எரிவாயு, 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 1 ஆம் தேதி, மேலும் 25 ரூபாய் உயர்ந்து ரூ.900 என்றளவைக் கடந்து மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கியது. இப்படி கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள், கடைகளில் உபோயகிப்படும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,133 என்றாகியுள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக இறங்கியுள்ளது. நாடு முழுவதும் இன்று 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது.
வணிக சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், உணவகங்கள், டீ கடைகளில் உணவு மற்றும் காபி, டீயின் விலையும் உயர் வாய்ப்புள்ளது. இது பண்டிகை காலம் என்பதல இனிப்பு, காரங்களில் விலையும் ஏற்றப்பட வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி உணவகத் தொழிலில் உள்ளோருக்கு இச்செய்தி பேரதிர்ச்சியாக வந்துள்ளது.