ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்

ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்
Updated on
1 min read

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 1.80 லட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை 2015-ம் ஆண்டு அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார். உலகின் 50 முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸை முன்னிலைப் படுத்துவதே தனது லட்சியம் என்று குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் 40-வது ஆண்டு கூட்டத்தில் முகேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு அங்கமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம்தான் நாடு முழுவதும் 4-ஜி சேவை அளிப்பதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தனது நிறுவனம் எந்த நிலைக்கு உயர வேண்டும் என்பதற்கான தொலை நோக்குத் திட்டத்தை அவர் வெளியிட்டார். தொலைத் தொடர்பு சேவையின் சோதனை உள்ளிட்ட பல நிகழ்வுகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என்று குறிப்பிட்ட அவர், முழுமையான சேவை அடுத்த ஆண்டு தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

சில்லறை வர்த்தகத்தில் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் அதிக வருவாயை ஈட்டியுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிவாயு வயல்களிலிருந்து கிடைக்கும் வாயுவின் அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2015-16-ம் நிதி ஆண்டில் நிலக்கரி மீத்தேன் வாயு எடுக்கும் பணி மத்தியப் பிரதேசத்தில் உள்ள சோஹாபூர் பகுதியில் தொடங்கும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் முகேஷின் தாயார் கோகிலா, மனைவி நீடா, குழந்தைகள் பங்கேற்றனர்.

சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 135-வதாக உள்ளது. இந்தப் பட்டியலில் 50 நிறுவனங்களுக்குள் ரிலையன்ஸ் வர வேண்டும் என்பதே முகேஷின் இலக்காகும். நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் முகேஷின் மனைவி நீடாவும் சேர்க்கப்பட்டார்.

கடந்த 37 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை ரூ. 2.40 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் ரூ. 1.80 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முகேஷ் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in