

உணவு பதப்படுத்தும் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான செயல்பாட்டு விதிமுறைகளை விரைவில் மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
உணவு பதப்படுத்தும் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நல்ல விலையை வழங்கமுடியும். மேலும் உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் தடுக்க முடியும். தற்போது இந்தியாவில் அதிக உணவு பொருட்கள் வீணாகின்றன. சேமிக்கும் வசதிகள் இல்லாததுதான் இதற்கு மிக முக்கிய காரணம். குறிப்பிட்ட காலத்திற்குள் கொள்முதல் செய்ய முடியாததாலும் உணவுகள் கெட்டுப்போகின்றன.
வேளாண்மை பொருட்களுக்கு மதிப்பு கூட்டி உருவாக்குவதில் நிறைய பேர் முதலீடு செய்ய ஆவலாக இருக்கின்றனர். அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் அவர்கள் வந்து நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வார்கள். நல்ல விலையை விவசாயிகளுக்கு வழங்குவார்கள். மேலும் பொருட்கள் வீணாகாமல் தடுத்து பொருட்களுக்கு மதிப்பை கூட்டுவார்கள். உணவு பதப்படுத்து வதில் அந்நிய நேரடி முதலீடு குறித்த விரிவான விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை மற்றும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணைந்து அமைச்சரவை குறிப்பை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
உணவு பதப்படுத்துதல் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு கொண்டு வருவது தொடர்பாக உணவு பதப்படுத்துதல் துறை மூத்த அதிகாரிகள், வர்த்தக மற்றும் தொழில்துறை அதிகாரிகளோடு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேச்சுவார்த்தை நடத்தினார்.
விவசாயிகளுக்கு பயனை ஏற்படுத்தித்தரும் வகையிலும் பழங்கள், காய்கறிகள் போன்றவற் றின் கழிவுகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலும் மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். விவசாயி களுக்கு இதன் மூலம் நன்மை ஏற்படும் மேலும் உணவுப் பதப்படுத் துதல் துறை மூலம் நிறைய வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவித்தார்.
புதிய விசா சட்டம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை
இங்கிலாந்து நாட்டின் புதிய விசா சட்டத்தால் பாதிப்பு குறித்து இங்கிலாந்து அதிகாரிகளிடம் தெரிவிப்போம் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விசா சட்டத்தின்படி ஆண்டுக்கு 35,000 பவுண்டுக்கு கீழே ஊதியம் பெறும் பணியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டும் என்று விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு குறித்து இங்கிலாந்து அதிகாரிகளிடம் தெரிவிப்போம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.