Published : 22 Oct 2021 06:14 PM
Last Updated : 22 Oct 2021 06:14 PM

2 புதிய கார்களை அறிமுகம் செய்தது வோல்வோ: அடுத்த ஆண்டில் பேட்டரி கார் அறிமுகம் செய்ய திட்டம்

சென்னையில் உள்ள வால்வோ விற்பனையகத்தில் எஸ் 90 காரை அறிமுகம் செய்தார் ராஜீவ் சவுகான் (இடது) உடன் கோவை வோல்வோ பிரிவின் பிரதிநிதி கார்த்திகேயன்.

சென்னை

ஸ்வீடனைச் சேர்ந்த சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் வோல்வோ நிறுவனம் நேற்று சென்னையில் இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்தது. எஸ் 90 மற்றும் எக்ஸ்சி 60 என்ற இரண்டு மாடல்களுமே பெட்ரோல் இன்ஜினைக் கொண்டது. இவை இரண்டுமே ஹைபிரிட் மாடலாகும். அடுத்த ஆண்டு முழுவதும் பேட்டரியில் இயங்கும் காரை அறிமுகம் செய்யப்போவதாக நிறுவனத்தின் நெட்வொர்க் இயக்குநர் ராஜீவ் சவுகான் தெரிவித்தார்.

கார்களை அறிமுகம் செய்து அவர் மேலும் கூறியதாவது:

"வோல்வோ நிறுவனம் டீசல் மாடல் கார்கள் தயாரிப்பைப் படிப்படியாகக் குறைக்கும் இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது செடான் மற்றும் எஸ்யுவி மாடல்களில் வந்துள்ள இரண்டு கார்களுமே பெட்ரோல் இன்ஜினைக் கொண்டவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு பேட்டரி கார்களுக்கு ஊக்குவிப்பு அளிப்பதைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு முழுவதும் பேட்டரியில் இயங்கும் காரை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எஸ் 90 மாடல் சொகுசு செடான் பிரிவைச் சேர்ந்ததாகும். 2 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. இது 250 ஹெச்பி திறனையும், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக்கூடியது. இது 1,969 சிசி திறன் கொண்டது. 12 வோல்ட் பேட்டரிக்கு பதிலாக இதில் 48 வோல்ட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது காரின் செயல்பாட்டுக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட காற்று சுத்திகரிப்பு, 360 டிகிரி சுழலும் கேமரா, அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். இது தவிர போவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் நிறுவனத்தின் 1400 வாட் ஸ்பீக்கரும் இதில் உள்ளது. மேலும் பயணக் களைப்பு தெரியாதிருக்க இதன் இருக்கைகளில் மசாஜ் வசதி உள்ளது. வெள்ளை, சில்வர், கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ள இந்த மாடல் காரின் விற்பனையக விலை ரூ.61,90,000.

அடுத்ததக எஸ்யுவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்சி 60 மாடல் அதிகபட்ச தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியது. இதவும் 1,969 சிசி திறன் கொண்டது. வெள்ளை, கிரே, கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த காரின் விற்பனையக விலையும் ரூ.61,90,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் கார் பராமரிப்பு குறித்துக் கவலைப்படாமலிருக்க 3 ஆண்டுகளுக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவை வசதியை ரூ.75 ஆயிரத்துக்கு அளிக்க நிறுவனம் திட்டமிட்டு அதை அறிவித்துள்ளது. இது இப்புதிய மாடல் கார்களுக்குப் பொருந்தும். அத்துடன் உதிரி பாகங்களுக்கு ஆயுள்கால உத்திரவாத சலுகையும் அளிக்கப்படும்" என்றார் ராஜீவ் சவுகான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x