

அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப எஃப்.-16 போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
எஃப்-16 போர் விமான தயாரிப்பு நிறுவன உரிமையாளர் லாக்ஹீட் மார்டின் அலுவலகத்தின் இந்தியத் தலைமை பில் ஷா, 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழிடம் இது குறித்து அறிக்கை வாயிலாக பகிர்ந்து கொண்டதில், “இது குறித்து அமெரிக்க அரசு, இந்திய அரசு மற்றும் இந்திய தொழிற்துறை கூட்டாளிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எஃப்-16 போர் விமானங்களின் உயர் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிகிறது.
லாக்ஹீட் மார்டினின் முதற்கட்ட திட்டங்களின் படி எஃப்-16 போர் விமானங்களின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இந்தியாவுக்கு அளிப்பதாக இருந்தது என்பதை நிறுவனத்தின் இந்திய தலைமை பில் ஷா சிங்கப்பூரில் ஏர் ஷோ 2016-ல் தெரிவித்தது, ஊடகங்களில் கவனம் பெறவில்லை. காரணம், இது குறித்து தெளிவான விவரங்கள் இல்லாததே. மேலும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் அமெரிக்காவின் இத்தகைய திடீர் ‘தாவல்’ குறித்த சந்தேகங்களும் இருந்தன.
பாகிஸ்தானுக்கு ஆப்கன் தாலிபான்களுக்கு எதிரான போரில் உதவ அமெரிக்கா பிளாக் 50/52 ரக எப்-16 ரக போர் விமானங்களையே வழங்கி வந்தது. ஆனால் பிளாக் 60 ரக எஃப்.16 போர் விமானம் இந்தியாவுக்கு விற்கப்படும் என்றே முன்பு பேச்சு இருந்து வந்தது.
பிளாக் 60 ரக எஃப்-16 போர் விமானம் என்பது ஒரே விமானத்தில் 2 விமானத்தின் தொழில் நுட்பங்கள் சேர்த்து வடிவமைக்கப்பட்டதாகும். இந்த உயர் தொழில் நுட்ப எஃப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்காததன் காரணம், இந்தத் தொழில்நுட்பம் பாகிஸ்தான் வழியாக சீனாவுக்கு கடத்தப்படலாம் என்று அமெரிக்கா ஐயம் கொண்டிருந்தது என்று நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இன்னொரு விஷயமும் நிபுணர்களால் கூறப்படுகிறது, அதாவது வளர்ந்த நாடுகளில் எஃப்-16 ரக போர் விமானங்கள் அதன் வர்த்தகத்தை இழந்து வருகின்றன, அதாவது இதனைக் காட்டிலும் ஸ்டெல்த்-திறன் உடைய எஃப்-35 ரக விமானங்களையே வளர்ந்த நாடுகள் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது.
மேலும், பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது இந்தியாவும் 5-ம் தலைமுறை எஃப்-35 ரக போர் விமானங்களுக்குச் செல்வதுதான் சிறந்தது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனாலும் தற்போது உலக நாடுகளிடையே 3,500-4,000 எஃப்-16 போர் விமானங்கள் சேவையில் உள்ளன. 2030-ம் ஆண்டு மற்றும் அதற்கப்பாலும் இதன் எஃப்-16 விமானங்களின் தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த விமானங்களை பழுது பார்க்கும் சேவைகளுக்கான சந்தை பெரிய அளவில் உள்ளன என்று கருதப்படுவதாலும், பழைய போர் விமானங்களிலிருந்து புதுரக போர் விமானங்களுக்கு மாறும் நாடுகளுக்கு 300-500 போர் விமானங்கள் தேவைப்படலாம் எனவே எஃப்-16 சந்தையைக் கணக்கில் கொண்டு இந்தியா இந்த திட்டத்தில் இறங்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ரஃபேல் ரக போர் விமானம் ஒன்றின் விலை 250 மில்லியன் டாலர்கள், ஆனால் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்றின் விலை 80 மில்லியன் டாலர்கள் எனவே பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு எஃப்-16 போர் விமானங்கள் கைகொடுக்கும் என்று அமெரிக்க நிபுணர் ஆஷ்லி டெல்லிஸ் தெரிவிக்கிறார்