Last Updated : 01 Mar, 2016 04:30 PM

 

Published : 01 Mar 2016 04:30 PM
Last Updated : 01 Mar 2016 04:30 PM

பட்ஜெட்: தோற்றங்களை கவனித்தால் தென்படும் ஏமாற்றங்கள்!

தோற்றங்கள் எப்பவும் ஏமாற்றக்கூடியவை. நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் பட்ஜெட் அறிவிப்புகளான வேளாண் வருவாயை இரட்டிப்பாக்குதல், ஊரக வளர்ச்சி, சமூக வளர்ச்சித்துறைக்காக கவர்ச்சிகரமாக பெயரிடப்பட்ட பல திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் போன்றவை வலது-சாரி தேசிய ஜனநாயகக் கூட்டணி பட்ஜெட் ஏதோ ‘சோஷலிஸ்ட்’ திருப்பம் கொண்டதான ஒரு பாவனையை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு வகையானது.

எப்படி விளக்கமளித்தாலும், சோஷலிஸ்ட் கொள்கை உருவாக்கம் என்பதன் சாராம்சம் என்னவெனில் அரசு செலவினங்களை அதிகப்படுத்துவது என்பதே. ஆனால் 2016-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் என்ற அளவில் புதிய தாழ்வையே அடையாளப்படுத்துகிறது.

முன்னாள் தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் என்.சி.சக்சேனா வார்த்தைகளில், “அரசு செலவினங்களைக் குறைப்பது என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் முறை ஆட்சியின் போது தொடங்கிய ஒன்று. இதுவே தேசிய ஜனநாயகக்கூட்டணி பட்ஜெட்டிலும் தொடர்ந்துள்ளது. 2009-10-ல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு செலவினங்கள் 15.9% என்ற உயரிய நிலையிலிருந்து கடந்த ஆண்டு 13.3% ஆக குறைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் இது மேலும் குறைந்து 12.6% ஆக உள்ளது. அரசு செலவினங்களில் இத்தகைய குறைப்பு எப்படி ‘சோஷலிஸ்ட்’ ஆகும்?”

‘சோஷலிஸ்ட்’ என்ற முத்திரை குறிப்பிடுவது போலல்லாமல் சமூக செலவினங்களில் தீவிர அதிகரிப்பு எதுவும் இல்லை, மாறாக தேர்தல் பயன்களை அறுவடை செய்யும் நோக்கத்துடன் தன்னைத்தானே சோஷலிஸ்ட் என்று அறிவித்துக் கொள்கிறது. 2015-16 பொருளாதார ஆய்வறிக்கை, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் தேவையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டிய போதும் இந்த ஒரு துண்டு அறிவுரைக்குக் கூட பட்ஜெட் செவிசாய்க்கவில்லை.

சதவீத விளையாட்டு:

சுகாதார பட்ஜெட் 9-10% என்று ஒரு சிறிய அளவு அதிகரிப்பு இருந்தாலும், தேவைப்படும் 30-40%க்கு வெகு குறைவாகவே உள்ளது. குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வரையிலான சுகாதாரக் காப்பீடு, தேசிய டயாலிசிஸ் திட்டம் என்ற இரண்டு சுவாரசியமான திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்த போதிலும் அரசு-தனியார்-கூட்டுறவு (பிபிபி) திட்டத்தின் கீழ் தனியார் துறையினருக்கு உதவுவதாகவே தெரிகிறது, இந்திய நோய்வாய்ப்பட்ட மக்களுக்கானதாக தெரியவில்லை.

ஜன் ஸ்வஸ்தியா அபியானின் அமித் சென்குப்தா கூறுகையில், “இந்த இரண்டு திட்டங்களும் நாட்டின் சுகாதாரத்துறையை தனியார்கள் எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றியதே, அரசு இதில் வெறும் மேனேஜர் வேலையைத்தான் செய்யப் போகிறது. இதுதான் வலதுசாரி மாதிரி என்பது. அதாவது பொதுச்சேவைகளை வழங்குவதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதுதான் வலதுசாரி பொருளாதார மாதிரி” என்கிறார்.

கல்வியின் நிலவரம் இன்னமும் மோசம். ஒட்டுமொத்தமாக ஒரு சிறிய அளவில் கல்விக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும், கல்விக்கான பட்ஜெட் சார்ந்த ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திலும் மொத்த பட்ஜெட்டின் விகிதத்திலும் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன.

இது ஜிடிபி-யில் 0.5% ஆகவும், வருவாய் செலவினங்களில் 3.8% ஆகவும் இருந்தது, தற்போது ஜிடிபியில் 0.48% என்றும் 3.7% என்றும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சமூக-பொருளாதார மற்றும் சாதிய கணக்கெடுப்புத் தரவின் படி இந்தியாவின் 75% ஊரகக் குடும்பங்களில் முக்கிய வருவாய் ஈட்டும் நபர் மாதமொன்றுக்கு ரூ.5,000-த்துக்கும் குறைவாகவே ஈட்டி வருகிறார். 50% கிராமபுற குடும்பங்கள் உதிரி உடலுழைப்பில்தான் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

அதாவது ஊரக மக்கள் தொகையினர் வாழ்வாதார நிலைமைகளில் மட்டுமே உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. எனவே இதில்தான் அரசு செலவினங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், ஆனால் இந்த பட்ஜெட்டில் இதற்காக ஒன்றுமில்லை.

பட்ஜெட் மற்றும் நிர்வாகப் பொறுப்புடைமை மையத்தின் ஹேப்பி பண்ட் சரியாகச் சுட்டிக்காட்டும் போது, “தேசிய சமூக உதவித் திட்டம் (வயதானோர், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், அன்னப்பூர்ணா திட்டம்) ஓரளவுக்கு ஒதுக்கீட்டு உயர்வை கண்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ரூ.9,000 கோடி ஒதுக்கப்பட்டது, இந்த ஆண்டு இது ரூ.9,500கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் இரண்டு நீண்ட கால கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன: அதாவது, 55 வயதைக் கடந்தோருக்கான சோஷியல் பென்ஷன், மற்றும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ.300 என்பதிலிருந்து ரூ.500 ஆக அதிகரிப்பது என்ற இரண்டு கோரிக்கைகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டன” என்று கூறினார்.

அதேபோல் வேளாண் துறைக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு பெரிதாகத் தெரிந்தாலும், தொடர்ந்த ஆண்டுக்கணக்கான வறட்சி நிலைமைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த ஒதுக்கீடு ஒரு போதும் போதாது, இது பற்றி பண்ட் கூறும்போது, “பட்ஜெட் ஒதுக்கீட்டில் பெரிய அளவில் அதிகரிப்பு செய்யப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்துகான ஒதுக்கீடு கூட, அரசு மானிய பிரிமியம் தொகையை அரசு செலுத்தும் என்ற அளவிலேயே உள்ளது.

இதன் மூலம் 20% விவசாயிகளே பயனடைய முடியும். அதிக விவசாயிகளை இதன் கீழ் கொண்டு வரும் முயற்சி இல்லை. சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது நல்ல விஷயம் என்றாலும் நிலமற்ற விவசாயிகள் பற்றி ஒன்றுமே இல்லை” என்கிறார்.

அரசின் நலத்திட்டங்கள் குறித்து..

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்றே அதிகமாக ரூ.38,500 கோடி என்றாலும், இந்தத் திட்டத்தை அர்த்தமுள்ள வகையில் செயல்படுத்த, கொண்டு செல்ல குறைந்தது ரூ.50,000 கோடி தேவைப்படும்.

எனவே கல்வி, சுகாதாரம், சமூகத்தில் நலிவுற்றோருக்கான ஓய்வூதியம், வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்று மத்திய பட்ஜெட் புதிதாக எந்த வித சாதனையையும் நிகழ்த்திவிடவில்லை.

தி இந்து (ஆங்கிலம்) |தமிழில்: ஆர்.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x