Published : 15 Oct 2021 10:02 AM
Last Updated : 15 Oct 2021 10:02 AM

கரோனா; தடுப்பூசி வழங்குவதில் சமமான அணுகுமுறை தேவை: ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டத்தில்  நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

கரோனா நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, தடுப்பூசிகளுக்கான சமமான அணுகலை அனைவருக்கும் உறுதி செய்வதே முக்கிய சவால் என வாஷிங்டனில் நடைபெற்ற 4-வது ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நிதியம் உலக வங்கி வருடாந்திர கூட்டங்கள் நடைபெற்றன. இத்தாலியின் தலைமையில் நடைபெற்ற 4-வது ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

இத்தாலியின் ஜி20 தலைமையில் நடைபெற்ற நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இறுதி கூட்டமான இதில், உலக பொருளாதார மீட்சி, பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு பெருந்தொற்று ஆதரவு, உலகளாவிய சுகாதாரம், காலநிலை நடவடிக்கை, சர்வதேச வரிவிதிப்பு மற்றும் நிதித்துறை பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றிய விவாதங்கள் மற்றும் உடன்பாடுகள் நடந்தேறின.

பெருந்தொற்றிலிருந்து மீட்பை அடைவதற்காக, ஆதரவு நிலைகளை முன்கூட்டியே திரும்பப் பெறுவதை தவிர்க்க ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ஒப்புக்கொண்டனர், அதே நேரத்தில் நிதி நிலைத்தன்மையையும் நீண்ட கால நிதி நிலைத்தன்மையையும் பாதுகாக்கவும் எதிர்மறை அபாயங்கள் மற்றும் கசிவுகளுக்கு எதிராகவும் அவர்கள் உறுதி மேற்கொண்டனர்.

கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

கரோனா நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, தடுப்பூசிகளுக்கான சமமான அணுகலை அனைவருக்கும் உறுதி செய்வதே முக்கிய சவால்களில் ஒன்றாகும். ஆதரவைத் தக்கவைத்தல், உறுதித்தன்மையை உருவாக்குதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை நமது கொள்கை இலக்குகளாக இருக்க வேண்டும்.

கடன் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் புதிய எஸ்டிஆர் ஒதுக்கீடு மூலம் பாதிக்கப்படும் நாடுகளை ஆதரிப்பதிலும் பெருந்தொற்றை எதிர்கொள்வதிலும் ஜி20-ன் பங்கை பாராட்டுகிறேன். உலகம் முழுவதும் நன்மைகள் சென்றடைய வேண்டிய நாடுகளுக்கு அவை சென்றடைவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளது. பல்வேறு கொள்கைகள் மற்றும் நாடுகளின் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளைக் கருத்தில் கொண்டு, வெற்றிகரமான முடிவுகளை நோக்கி விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பருவநிலை நீதியின் மையத்தன்மை மிக முக்கியமானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத்தின் டிஜிட்டல்மயமாக்கலில் இருந்து எழும் வரி சவால்களை எதிர்கொள்ள, அக்டோபர் 8, 2021 அன்று ஓஈசிடி/ஜி20 ஒருங்கிணைந்த கட்டமைப்பால் வெளியிடப்பட்ட விரிவான செயல்படுத்தல் திட்டம் மற்றும் இரு-தூண் தீர்வு அறிக்கையின் இறுதி ஒப்பந்தத்திற்கு ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் ஒப்புதல் அளித்தது.

சர்வதேச பொருளாதாரத்தை வலுவான, நீடித்த, சமநிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான ஜி20 செயல்திட்டத்தை துரிதமாக செயல்படுத்துவதற்கான ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் உறுதியோடு கூட்டம் நிறைவுற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x