ஜேபி மார்கனை வாங்குகிறது எடில்வைஸ்

ஜேபி மார்கனை வாங்குகிறது எடில்வைஸ்
Updated on
1 min read

ஜேபி மார்கன் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை எடில்வைஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் வாங்க திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் 7,000 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை கையாளுகிறது.

ஜேபி மார்கன் நிறுவனத்தின் அனைத்து பண்ட்களையும் எடில்வைஸ் வாங்க முடிவு எடுத்திருக்கிறது. திட்டங்கள் மட்டுமல்லாமல் ஜேபி மார்கன் நிறுவனத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் பணியில் எடுத்துக் கொள்ள எடில்வைஸ் முடிவெடுத்திருக் கிறது.

இந்த இணைப்புக்குப்பிறகு எடில்வைஸ் மியூச்சுவல் பண்ட் கையாளும் சொத்துமதிப்பு 8,757 கோடி ரூபாயாக இருக்கும். டிசம்பர் இறுதியில் ஜேபி மார்கன் நிறுவனம் 7081 கோடி ரூபாய் சொத்துகளும், எடில்வைஸ் 1,600 கோடி சொத்துகளையும் கையாண்டன.

ஜேபி மார்கன் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் ஜேபி மார்கன் முதலீடு செய்திருந்தது. அம்டெக் ஆட்டோ நிறுவனம் கடன் பிரச்சினையில் இருந்தால் ஜேபி மார்கன் நிறுவனத்துக்கும் சிக்கல் உருவானது. ஜேபி மார்கன் நிறுவனத்தில் உள்ள கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், முதலீட்டை வெளியே எடுக்க நினைத்தனர்.

கடந்த சில வருடங்களாகவே வெளிநாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றன. கடந்த வருடம் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தை வாங்கியது.

2008-ம் ஆண்டு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை ஐடிஎப்சி வாங்கியது. பிடிலிட்டி நிறுவனத்தை எல் அண்ட் டி பைனான்ஸும், மார்கன்ஸ் ஸ்டான்லி நிறுவனத்தை ஹெச்டிஎப்சியும், ஐஎன்ஜி மியூச்சுவல் பண்டை பிர்லா சன் லைப் நிறுவனமும், பைன் பிரிட்ஜ் நிறுவனத்தை கோடக் மியூச்சுவல் பண்டும், டாய்ஷ் மியூச்சுவல் பண்டை பிரமெரிக்கா நிறுவனமும் வாங்கியது.

ஜேபி மார்கன் நிறுவனத்தை வாங்க டாடா மியூச்சுவல் பண்ட் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாக சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைப்புக்குப்பிறகு எடில்வைஸ் மியூச்சுவல் பண்ட் கையாளும் சொத்துமதிப்பு 8,757 கோடி ரூபாயாக இருக்கும். கடந்த சில வருடங்களாகவே வெளிநாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in