Published : 27 Mar 2016 02:29 PM
Last Updated : 27 Mar 2016 02:29 PM

மொரிஷியஸில் இருந்து வரும் முதலீடுகள் குறைவது ஏன்?

கடந்த காலங்களில் இந்தியாவுக்கு வரும் முதலீடுகளில் கணிச மானவை மொரிஷியஸில் இருந்து வரும். பங்குச்சந்தைக்கு வரும் அந்நிய நிறுவன முதலீடு (எப்ஐஐ) மற்றும் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) என இரண்டு வகையான முதலீடுகளும் அங்கிருந்துதான் வரும். ஆனால் இப்போது மொரி ஷியஸில் இருந்து வரும் முதலீடு கள் குறைந்திருக்கின்றன.

இப்போது இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் அமெரிக்காவில் இருந்து அதிகம் வருகின்றன. அத னைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து அதிக முதலீடுகள் வரு கின்றன.

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான `செபி’-யின் தகவல்களுடன் ஒப்பிடும் போது இவை தெரிய வருகின்றன. 2012 பிப்ரவரிக்கும் 2016 பிப்ரவரிக்கும் இடையேயான காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தைக்கு மொரிஷியஸில் இருந்து 84,712 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. ஆனால் இதே காலகட்டத்தில் அமெரிக் காவில் இருந்து 3,40,921 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. சிங்கப் பூரில் இருந்து ரூ.1,08,482 கோடி யும் லக்‌ஸம்பெர்க்கில் இருந்து ரூ.89,864 கோடியும் வந்துள்ளன.

தவிர சமீபகாலமாக முதலீடு செய்வதற்கு மாறாக ஏற்கெனவே செய்திருந்த முதலீட்டை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை யில் இருந்து 5,000 கோடி ரூபாய் மொரிஷியஸுக்கு சென்றிருக்கி றது. மாறாக அமெரிக்க முதலீட் டாளர்கள் கடந்த 2015-ம் ஆண்டு இந்திய சந்தையில் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய் திருக்கின்றனர். அமெரிக்க பொரு ளாதாரம் மீண்டும் வருவதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். தவிர சர்வதேச அளவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களில் பாதிக்கும் மேல் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மொரிஷியஸ் வழியாக செல்வதை விட நேரடி யாக இந்தியாவில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கலாம்.

ஏன் இந்த மாற்றம்?

இந்தியாவுக்கும் மொரிஷி யஸுக்கும் இடையே உள்ள ஒப் பந்தம் காரணமாக வரிச்சலுகை பெறவே பல நாடுகளில் இருந் தும் மொரிஷியஸ் வழியாக இந்தியாவில் முதலீடு செய்தன. மொரிஷியஸ் வழியாக முதலீடு செய்யும் பட்சத்தில் மூலதன ஆதாய வரியை மொரிஷியஸ் விதிக் காது. அதனால் முதலீட்டின் மீதான வருமானத்தை நேரடியாக தங்கள் நாட்டுக்கு எடுத்து சென்று அங்கு மட்டும் வரி செலுத்தினால் போதும் என்ற விதி காரணமாக மொரிஷியஸ் வழியை முதலீட்டாளர்கள் தேர்ந் தெடுத்தனர்.

ஆனால் சமீபகாலமாக மொரிஷி யஸுடனான ஒப்பந்தம் தவறாக பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு அதிருப்தியாக இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு மொரிஷியஸ் உடனான ஒப்பந்தத்தை இந்தோ னேசியா ரத்து செய்தது. இந்தியா வும் இதேபோல ஒப்பந்ததை ரத்து செய்யலாம் அல்லது அந்த ஒப்பந்தத்தில் திருத்தம் மேற் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் புதிய வரி விதிப்பு முறையான, பொது வரி விதிப்பு தடுப்பு விதி (ஜிஏஏஆர்) வரும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் வரி விதிப்புக்காக மட்டும் மொரிஷியஸில் அலுவலகம் தொடங்கும் நிறுவனங்கள் மீது இந்திய வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த இரு காரணங்களுக்காக மொரி ஷியஸில் இருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் குறையலாம்.

குறையும் பங்கு

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்பிஐ) செய்து வரும் முதலீடு களில் மொரிஷியஸின் பங்கு குறைந்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு மொத்த எப்பிஐ முதலீட்டில் மொரிஷியஸின் பங்கு 28.30 சதவீதமாக இருந்தது. பிப்ரவரி 2016-ல் 19 சதவீதமாக குறைந்துவிட்டது. அதேபோல 2012 அமெரிக்காவின் பங்கு 26 சதவீதமாக இருந்தது. 2016 பிப்ர வரியில் 30.81 சதவீதமாக உயர்ந்தி ருக்கிறது.

அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ)

அந்நிய நிறுவன முதலீட்டை போலவே அந்நிய நேரடி முதலீடும் குறைந்து வருகிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் மொரிஷியஸில் இருந்து இந்தியாவுக்கு வந்த எப்டிஐ முதலீடு 55,172 கோடி ரூபாய்.

அதே காலத்தில் சிங்கப் பூரில் இருந்து ரூ.41,350 கோடி மற்றும் அமெரிக்காவில் இருந்து 11,150 கோடி ரூபாய் வந்தது. ஆனால் 2015 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மொரிஷியஸில் இருந்து வந்த எப்டிஐ தொகை 39,506 கோடி. இதே காலத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த எப்டிஐ தொகை ரூ.71,195 கோடி.

சிங்கப்பூரிலும் குறைந்த வரி விகிதம்தான். சிங்கப்பூருடன் இந்தியா இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. தெளி வான சட்ட விதிமுறைகள் உரு வாக்கப்பட்டிருப்பதால், இந்த ஒப் பந்தத்தை தவறாக பயன்படுத்த முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x