வளர்ச்சி வானில் பிரகாசமாய் மின்னும் நட்சத்திரம் இந்தியா! - டெல்லி மாநாட்டில் ஐஎம்எப் தலைவர் புகழாரம்

வளர்ச்சி வானில் பிரகாசமாய் மின்னும் நட்சத்திரம் இந்தியா! - டெல்லி மாநாட்டில் ஐஎம்எப் தலைவர் புகழாரம்
Updated on
2 min read

அதிக எண்ணிக்கையில் இளம் மனித வளம் மற்றும் தொடர்ந்து கொள்கை சீர்திருத்தங்கள் காரண மாக இந்தியா மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் நாடுகளில் முன்னணியில் திகழ் கிறது என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்டு குறிப்பிட்டார்.

``முன்னேறும் ஆசியா’’ என்ற தலைப்பிலான மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய அவர் மேலும் கூறியது:

வளர்ச்சி எனும் வானில் பிரகாச மான நட்சத்திரமாக இந்தியா மிளிர்கிறது. சர்வதேச அளவில் தேக்க நிலை காணப்பட்டபோதிலும் இந்தியா பிரகாசமாக ஜொலிக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

ஆசியா முன்னேறுகிறது என்ற மாநாட்டை இந்தியாவில் நடத்துவது மிகவும் பொருத்தமானது. உலகி லேயே மிகப் பெரிய வேகமான வளர்ச்சியடையும் நாடாக இந்தியா திகழ்கிறது. இதற்கு இந்தியாவில் உள்ள இளம் மனித வளமே காரணம். இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த மக்கள் தொகை கொண்ட நாடாக இது திகழும்.

சர்வதேச செலாவணி நிதியம் இந்தியாவில் புதிய பிராந்திய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தை தெற்காசிய பிராந்தியத்துக்கென உருவாக்கும் என்றார்.

இந்திய சாதனை

ஆசியாவின் சாதனைகளைப் பட்டியலிடும் முன்பு இந்தியாவின் சாதனைகளைக் கூறுவது மிகவும் பொருத்தமானது. சர்வதேச பொருளாதார தேக்க நிலை மற்றும் சீரற்ற பொருளாதார சூழல் நிலவும் இந்நிலையில் இந்தியா தனித்து முன்னேறுகிறது.

வரலாற்றின் முக்கியமான தருணத்தில் இந்தியா இருக்கிறது. மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக இந்தியாவுக்கு கிடைத் துள்ளது. முக்கியமான சீர்திருத்தங்கள் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மேலும் சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அரசு அளிக்கும் உத்தரவாதம் இந்தியாவை உலக பொருளாதார வானில் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலிக்க வைத்துள்ளது.

ஆசிய வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் இங்குதான் இருக்கின்றனர். அதிலும் அதிகம் பேர் இந்தியாவில் உள்ளனர். இவர்களுக்குத் தீர்வு காண வேண்டும். ஆசிய பிராந்தியத்தில் உள்ள 440 கோடி மக்களும் தங்களது முழுத் திறனை வெளிக் கொண்டு வர வேண்டிய நேரமிது என்ற அவர் 6 முக்கிய அம்சங்களை கோடிட்டுக் காட்டினார்.

பற்றாக்குறையைக் கட்டுப் படுத்த உரியவர்களுக்கு அரசின் மானிய உதவி சென்று சேரும் வகையில் பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் சென்று சேர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மகளிருக்கு அதிகாரம் கல்வி மூலம் வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, சுகாதாரம், மின் வசதி மற்றும் சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தக ஒருங்கிணைப்பு மூலம் ஸ்திரமான வளர்ச்சிக்கு வழி காணப்பட்டுள்ளது.

பருவ நிலை மாறுபாட்டை சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லெகார்டு குறிப்பிட்டார்.

2018-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வங்கிச் சேவை என்ற இலக்கை நோக்கி இந்தியா செயல்படுவதை அவர் பாராட்டினார்.

பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் 21 கோடி மக்களுக்கு வங்கிச் சேவை 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டதை பாராட்டிய அவர், மானிய உதவி நேரடியாக வழங்கப்பட்டதையும் வெகுவாகப் பாராட்டினார்.

ஆதார் அடையாள அட்டை வழங்கியதன் மூலம் மானிய உதவிகளை இந்தியா முறைப் படுத்தியதையும் சுட்டிக்காட்டிய அவர், 100 கோடி மக்கள் ஆதார் அட்டை பெற்றுள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருவது சிறப்பான விஷயம் என்றார்.

இந்தியாவில் உருவாக்கப்பட உள்ள மையம் முற்றிலும் ஒருங் கிணைந்த மையமாக எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களை செயல் படுத்த முன்னோடி மையமாக இது திகழும் என்றார்.

இந்த மையம் இப்பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை உள்ளிட்டவற்றுக்கு உதவியாக இருக்கும். இம்மையத்துக்கு தேவையான உதவிகளை ஆஸ்திரேலியா, கொரியா வழங்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in