

இணைய சமநிலை குறித்த விவகாரத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம் கூறியுள்ளது. டிஜிட்டல் மீடியா மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு `டிராய்’ தலைவர் ஆர்.எஸ்.சர்மா இதை குறிப்பிட்டுள்ளார்.
இணைய சமவாய்ப்பின் அடிப்படையான அர்த்தம் பாரபட்ச மில்லாத இணைய சேவைதான். உள்ளடக்கம் மற்றும் கட்டண வித்தியாசங்கள் அடிப்படையில் இணைய சேவை வழங்குவதற்கு எதிரானது.
இணைய சமவாய்ப்பு விவ காரம் ஏர்டெல் ஜீரோ திட்டத்தை அறிவித்ததும் தொடங்கியது. ஏர்டெல் நிறுவனம் இண்டர்நெட் மூலம் தொலைபேசி சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனால் அந்த திட்டத்தை ஏர்டெல் திரும்ப பெற்றது. அதற்கு பிறகு ஏர்டெல் ஜீரோ மற்றும் பேஸ்புக் ப்ரீபேசிக்ஸ் திட்டங்களும் பொதுமக்களின் பலமான எதிர்ப்புக்கு பிறகு திரும்ப பெறப்பட்டது.
இணைய சமவாய்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் டிராய் தடை விதித்தது. பாரபட்சமான கட்டணம் அல்லது உள்ளடக் கம் அடிப்படையிலான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க எந்த ஒப்பந்தங்களிலும் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என டிராய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் `டிராய்’ மேலும் சில விவகாரங்களை தீர்க்க வேண்டியுள்ளது. இணைய வேகம் மற்றும் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட பேசும் வசதிகள், செய்தி அனுப்புதல் போன்ற விவகாரங்களுக்கு டிராய் தீர்வு காண வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-பிடிஐ