

ஹைதராபாத்தில் மருத்துவ நிறுவன குழுமத்துக்கு சொந்தமான இடங்களில், வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.142 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவன குழுமம், மருந்துகள் மற்றும் மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக சந்தேகம் அடைந்த வருமான வரித்துறையினர், 6 மாநிலங்களில் 50 இடங்களில் மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 6ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில் மறைவிடங்களில், மற்றொரு கணக்கு புத்தகங்கள், டிஜிட்டல் பதிவுகள், போலி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், நிலங்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
16 வங்கி லாக்கர்களில் இருந்து, ரூ.142.87 கோடி கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத சொத்துக்களின் மதிப்பு ரூ.550 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடக்கின்றன.